ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது

பெங்களுரூவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்டார் அப் நிறுவனமான ஏத்தர் எனெர்ஜி, ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 என இரு மின்சார ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக பெங்களூருவில் மட்டும் இந்த ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450

ஏத்தர் எனெர்ஜி நிறுவனம், இந்தியாவின் எதிர்கால தேவையை மிக சரியாக பூர்த்தி செயும் வகையில் இரு மின்சார ஸ்கூட்டர் மாடல்களை பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டருக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் வகையில் தயாரித்துள்ளது. 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் இரண்டும் ஒரே விதமான வடிவமைப்பினை பெற்றிருப்பதுடன் மோட்டார் உள்ளிட்ட அம்சங்களில் ஒன்றாகவே அமைந்திருந்தாலும் சில குறிப்பிடதக்க மாற்றங்களாக அதிகபட்ச வேகம், சார்ஜிங் அம்சத்தை இல்லங்களில் பயன்படுத்திக் கொள்ள ஏத்தர் 450 வழி வகுக்கின்றது.

ஏத்தர் 340, மற்றும் ஏத்தர் 450 ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும், 5kW BLDC (brushless direct current) எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 340 ஸ்கூட்டரில் 4.4 kw (5.9 PS) பவர், 20 NM டார்க் திறனையும், 450 ஸ்கூட்டரில் 5.4 kw (7.3 PS) பவர்,  20.5 NM வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏத்தர் 340 ஸ்கூட்டரில் முழுமையான ஒரு முறை சார்ஜ் செய்தால், 60 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கலாம். அதே நேரத்தில் ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையான ஒரு முறை சார்ஜ் செய்தால், 75 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம்.

ஏத்தர் 340 ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டர் ஆகும். மறுபக்கம் ஏத்தர் 450 ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர் ஆகும். 0-40 கிமீ வேகத்தை 340 ஸ்கூட்டர் எட்டுவதற்கு 5.1 விநாடிகளும், 0-40 கிமீ வேகத்தை 340 ஸ்கூட்டர் எட்டுவதற்கு 3.9 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.

2.4 kWh லித்தியான் இயான் பேட்டரி 50,000 கிலோ மீட்டர் வரை உழைக்கும் திறனை கொண்டதாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரி பேக் மிக சிறப்பான பாதுகாப்பு அம்சமாக IP67 எனப்படும், தூசு மற்றும் நீரினால் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பேட்டரி விளங்கும்.

முதற்கட்டமாக பெங்களூரு நகரில் ஏத்தர் கிரிட் என்ற பெயரில் 30 சார்ஜிங் ஸ்டேஷன்களை திறந்துள்ளது. பெங்களூருவில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ள இந்த ஸ்கூட்டர் படிப்படியாக நாடு முழுவதும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

ஏத்தர் 340 மின்சார ஸ்கூட்டர் விலை ரூ. 1.09 லட்சம்

ஏத்தர் 450 ஸ்கூட்டர் ஸ்கூட்டர் விலை ரூ. 1.24 லட்சம்