Site icon Automobile Tamilan

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R & ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கின் விலை விபரம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் , வரும் காலங்களில் பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள் அறிமுகம் மற்றும் விற்பனையை முன்னெடுத்து வரும் நிலையில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட உள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் ஆகிய இரு பைக்குகளின் எதிர்பார்க்கப்படும் விலை குறித்து அறிந்து கொள்ளலாம்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R

அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் முதன்முறையாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிக்கு வந்ததை தொடர்ந்து கடந்த ஜனவரி மாத இறுதி நாளில் உற்பத்தி நிலை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரிமியம் சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் பல்வேறு கான்செப்ட் மாடல்களை காட்சிப்படுத்தி வந்த நிலையில் முதல் மாடலாக எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கில் இடம்பெற உள்ள எஞ்சின் அதிகபட்சமாக 18 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 17 என்எம் டார்க் வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மிக சிறப்பான வகையில் எஞ்சினை பேலன்ஸ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஷாஃப்ட்கள் அதிர்வுகளை முழுமையாக கட்டுப்படுத்தும் என ஹீரோ தெரிவித்துள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் அதிகபட்சமாக மணிக்கு 114 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன், 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்ககு வெறும் 4.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

200சிசி சந்தையில் நிலவி வரும் மிக கடுமையான போட்டடியை எதிர்கொள்ள உள்ள எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் போட்டியாளர்கள், டிவிஎஸ் அப்பாச்சி 200, பஜாஜ் பல்சர் 200NS ஆகிய மாடல்களை எதிர்கொள்ள உள்ள எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக் சுசூகி ஜிக்ஸெர், ஹார்னெட் 160ஆர் ஆகியவற்றையும் எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கின் விலை ரூ. 88,000 முதல் ரூ.98,000 வரை அமைந்திருக்க வாய்ப்புகள் உள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ்

இந்திய சந்தையில் குறைந்த விலை இரட்டை பயனை வழங்க வல்ல மாடலாக வரவுள்ள ஹீரோ மோட்டோகார்ப்பின் எக்ஸ்பல்ஸ் பைக் மாடல் இந்த வருடத்தின் நவம்பர் மாத இறுதிக்குள் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

முதன்முறையாக 2017 EICMA மோட்டார் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த அட்வெனச்சர் ரக மோட்டார்சைக்கிளில் எகஸ்ட்ரீம் 200 மாடலில் இடம்பெற உள்ள அதே எஞ்சின் அதிகபட்சமாக 18 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 17 என்எம் டார்க் வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

மேலும் இந்த மோட்டார்சைக்கிள் ஏபிஎஸ் ஆப்ஷனாலாக உள்ள மாடலும் ரூ.1 லட்சத்தக்கு குறைந்த விலையை கொண்டிருக்கும் என்பதனால் நிச்சியமாக சந்தையில் மிகுந்த வரவேற்பினை பெற வாய்ப்பபுகள் உள்ளது.

இது குறித்து ஹீரோ நிறுவன தலைமை அதிகாரிகளில் ஒருவரான Malo Le Masson ஆட்டோகார் ப்ரோஃபெஸனல் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் விற்பனை ஆகின்ற 70 சதவீத பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள்கள் ரூ.1லட்சத்துக்கு குறைவான விலை கொண்ட மாடலாக விளங்குவதனால், எங்களுடைய புதிய எக்ஸ்ட்ரீம் 200ஆர் மற்றும் எக்ஸ்பல்ஸ் ஆகிய இரு மாடல்களும், ரூ.1 லட்சத்துக்கு குறைந்த விலையில் அமைந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இரு மோட்டார்சைக்கிள் மாடல்களும் ஹீரோ நிறுவனத்தின் தரம் மற்றும் மைலேஜ் சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என்பதுடன், ஏபிஎஸ் பிரேக்கினை ஆப்ஷனலாக பெற்றிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version