
இந்தியாவில் நீண்ட தூர நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு ஏற்ற பாரத் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ‘BB1924’ ஹெவி டியூட்டி பஸ் சேஸிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு தேவையான வகையில் வடிவமைத்துக் கொள்ள முடியும் என DICV நிறுவனம் தெரிவித்துள்ளது.
19,500 கிலோ (19.5 டன்) மொத்த வாகன எடை (GVW) கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள BB1924 அதிகப்படியான பயணிகளையும் (51+1+1), அவர்களின் உடைமைகளையும் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாரத் பென்ஸ் BB1924
இந்த ஹெவி டியூட்டி பேருந்தில் BS-VI உடன் OBD-II ஆதரவை பெற்ற 7200cc டீசல் என்ஜின் அதிகபட்சமாக 241 HP பவர், 850 Nm டார்க் வழங்குவதுடன் நெடுஞ்சாலைகளில் மென்மையான பயணத்தை உறுதி செய்ய 6-வேக சின்க்ரோமெஷ் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
380 லிட்டர் கொள்ளளவு (Adblue 60 லிட்டர்)கொண்ட டீசல் டேங்கினை கொண்டு 1300 கிமீ பயணிக்கலாம் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கூடுதலாக மற்றொரு ஆப்ஷன் 355 லிட்டர் டேங்க் உள்ளது.
51+1+1 ஆதரிக்கின்ற வகையிலான சேஸிஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆன்டி-ரோல் பார்களுடன் ஏர் சஸ்பென்ஷனை கொண்டிருப்பதுடன் மிக உறுதியான பாதுகாப்பினை வழங்குவதற்கு ஏற்ற ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி மற்றும் மின்னணு வாகன நிலைத்தன்மை கட்டுப்பாடு (Electronic Vehicle Stability Control) போன்ற அதிநவீன வசதிகளுடன் ரிடார்டர் (Retarder) மூலமாக மலைப்பாதைகளில் இறங்கும்போது பிரேக்குகளின் தேய்மானத்தைக் குறைக்க 5-நிலை எலக்ட்ரோமேக்னடிக் ரிடார்டர் வழங்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு மற்றும் உத்தரவாதம்
பேருந்து உரிமையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த வாகனத்திற்கு 6 ஆண்டுகள் அல்லது 6 லட்சம் கிலோமீட்டர் வரை வாரண்டி வழங்கப்படுகிறது. மேலும், பராமரிப்புச் செலவைக் குறைக்கும் வகையில், முதல் சர்வீஸ் 60,000 கிலோமீட்டரிலும், அதன்பிறகு ஒவ்வொரு 1,20,000 கிலோ மீட்டரிலும் சர்வீஸ் செய்தால் போதுமானது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, இந்த மாடல் மும்பை-புனே, டெல்லி-ஜெய்ப்பூர் மற்றும் சென்னை-பெங்களூரு போன்ற முக்கிய வழித்தடங்களில் விரிவான கள சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இயக்கச் செலவுகளில் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குவதாக என்று வர்த்தகப் பிரிவுத் தலைவர் ஆண்டமுத்து பொன்னுசாமி கூறினார்.
இந்த பேருந்தின் விலை குறித்த துல்லியமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை, சேஸிஸ் மற்றும் கூண்டு கட்டுமானத்தை பொருத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும் என்றாலும், இது சந்தையில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் எளிதாக இந்த வாகனத்தை வாங்கும் வகையில், ஹெச்டிஎஃப்சி (HDFC), ஐசிஐசிஐ (ICICI) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வங்கிகளுடன் இணைந்து 8.5% வட்டி விகிதத்தில் கடனுதவி மற்றும் 5 ஆண்டுகள் வரை தவணை வசதியையும் பாரத் பென்ஸ் ஏற்படுத்தித் தந்துள்ளது.