ஹூண்டாய் இந்தியாவின் புதிய தலைமுறை வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி நவம்பர் 4, 2025ல் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், உற்பத்தி நிலை மாடலின் முன்பக்க தோற்றம் வெளியாகியுள்ளது.
இன்டீரியரில் பெரிய அளவிலான மாற்றங்கள் பெற்று 10.2 அங்குல தொடுதிரை சார்ந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றதாக வரவுள்ள நிலையில், என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.
2026 Next-Gen Hyundai Venue
வரவுள்ள புதிய வெனியூ காரில் முன்பக்க கிரில் அமைப்பு தற்பொழுது சந்தையில் உள்ள க்ரெட்டாவுக்கு இணையான முகப்பினை தழுவியதாக அமைந்திருப்பதுடன் செங்குத்தான முறையில் அடுக்கப்பட்ட ஹெட்லைட் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குடன் உள்ளது.
பக்கவாட்டில் புதிய ஏரோ டிசைனை தழுவிய 16 அங்குல அலாய் வீலுடன் கிளாடிங் பேனல் என அனைத்தும் வேறுபட்டதாக உள்ள நிலையில் , பின்பக்கத்தில் உள்ள டெயில் லைட் மற்றும் பம்பர் மாற்றப்பட்டிருக்கலாம்.
பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளில் 6 ஏர்பேக்குகளுடன் உறுதியான கட்டுமானத்தை பெற்று BNCAP கிராஷ் சோதனைக்கு ஏற்றதாகவும் ஏபிஎஸ் உடன் இபிடி, இஎஸ்பி, ஹீல் ஹோல்டு அசிஸ்ட் ஆகியவற்றுடன் 360 டிகிரி கேமரா, புதுப்பிக்கப்பட்ட ADAS தொகுப்பு கொண்டிருக்கலாம்.
1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று ஆப்ஷன்களை கொண்டிருப்பதுடன் மேனுவல், ஏஎம்டி மற்றும் ஆட்டோமேட்டிக் பெற்றிருக்கும், கூடுதலாக இந்த முறை சிஎன்ஜி ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக டாடா மற்றும் மஹிந்திரா கடுமையான சவாலினை ஹூண்டாய் எதிர்கொள்வதனால் தற்பொழுது சில மாதங்களாக இரண்டாவது இடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு மூன்று அல்லது நான்காவது இடத்தை மாதந்திர விற்பனையில் பின்தங்கி வரும் நிலையில் வெனியூ மாடலை ஹூண்டாய் பெரிய அளவில் எதிர்பார்க்கின்றது.
இந்த காருக்கு மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், XUV 3XO மஹிந்திரா, ஸ்கோடா கைலாக், மற்றும் கியா சொனெட் உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் போட்டியாக உள்ளது.