Categories: Car News

செப்டம்பர் 16ல் கியா கார்னிவல் முன்பதிவு துவங்குகின்றது

2024 Kia Carnival mpv side

வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் கார்னிவல் எம்பிவி மாடலுக்கான முன்பதிவு கட்டணமாக ரூபாய் 2 லட்சம் வசூலிக்கப்பட்டு செப்டம்பர் 16 முதல் முன்பதிவு துவங்குகின்றது.

இந்தியாவில் வரவுள்ள புதிய கார்னிவல் மாடலில் இடம் பெற உள்ள எஞ்சின் விபரம் தற்பொழுதும் வெளியாகவில்லை என்றாலும் கூட இந்த மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச அளவில் கூடுதலாக 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 3.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் என்ஜின் ஆனது கிடைக்கின்றது.

முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள (CBU) கார்னிவல் காரில் ஒற்றை வேரியண்ட் மட்டும் பெற்று முழுமையான பல்வேறு நவீன வசதிகள் கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர் மூலம் இரண்டு சன்ரூஃப், 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ADAS பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.

இந்திய சந்தையில் இந்த மாடலுக்கான நேரடியான போட்டிகள் இல்லை என்றாலும் இன்னோவா கிரிஸ்டா, டொயோட்டா வெல்ஃபயர் காரும் கடுமையான சவாலினை ஏற்படுத்தும். மேலும், இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்படும் பொழுது அநேகமாக ரூபாய் 55 லட்சம் முதல் ரூபாய் 60 லட்சத்திற்குள் அமையலாம்.