இந்தியாவில் அதிகாரப்பூர்வ விற்பனையை துவங்கியுள்ள எலான் மஸ்கின் டெஸ்லாவின் எலக்ட்ரிக் காரான மாடல் ஓய் (Tesla Model Y)எஸ்யூவி ரூ.58,89,000 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் டெலிவரி 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் துவங்கப்பட உள்ளது.
முன்பதிவு கட்டணம் ரூ.22,220 வசூலிக்கப்படும் நிலையில் அடுத்த 7 நாட்களுக்குள் ரூ3,00,000 செலுத்த வேண்டும் மேலும் இந்த தொகை திரும்ப பெற முடியாத (non-refund) வகையில் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது.
முதலில் டெஸ்லா மாடல் Y விலைப்பட்டியல் பற்றி பார்க்கலாம்
- Model Y RWD Standard – ₹ 58,89,000
- Model Y RWD LongRange – ₹ 67,89,000
மேலே குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை ஸ்டெல்த் கிரே என்ற ஒற்றை நிறத்துக்கு மட்டுமே பொருந்தும், கூடுதலாக Pearl White Multi-Coat, Diamond Black என இந்த இரு நிறங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்தால் எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ.95,000 கூடுதலாக செலுத்த வேண்டும். Glacier Blue என்ற நிறத்துக்கு ரூ.1.25 லட்சம் கூடுதல் விலை, இறுதியாக Quicksilver,Ultra Red என்ற இரு நிறத்துக்கும் ரூ.1.85 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் கூடுதலாக செலுத்த வேண்டும்.
கருப்பு நிறத்தை ஸ்டாண்டர்டு நிறமாக பெற்ற இன்டீரியரில் கூடுதலாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தை ஆப்ஷனலாக தேர்ந்தெடுத்தால் ரூ.95,000 வரை கூடுதலாக செலுத்த வேண்டும்.
டெஸ்லாவின் மிக பிரசத்தி பெற்ற தானியங்கி முறையில் இயங்கும் Full Self-Driving நுட்பத்தை பெற வேண்டும் என்றால் கூடுதலாக ரூ.6,00,000 செலுத்த வேண்டும்.
எவ்விதான கூடுதல் மாற்றங்களும் சேர்க்கப்படாமல் மாடல் ஓய் ஆன்-ரோடு விலை மும்பை
- Model Y RWD Standard – ₹ 60,99,690
- Model Y RWD Long Range – ₹ 69,07,690
2130 லிட்டருக்கும் கூடுதலான இடவசதி கொண்டு 15.3-இன்ச் சென்ட்ரல் டச்ஸ்கிரீன் சிஸ்டத்தை பெற்று 9-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், 8-இன்ச் பின்புற டச்ஸ்கிரீன், சுற்றுப்புற விளக்குகள், பனோரமிக் சன்ரூஃப் பெற்றுள்ளது.
டெஸ்லா மாடல் ஓய் ரேஞ்ச், சார்ஜிங் விபரம்
ஸ்டாண்டர்டு மற்றும் லாங் ரேஞ்ச் என இரண்டிலும் பொதுவாக டாப் ஸ்பீடு மணிக்கு 201 கிமீ ஆகவும், 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்ட 5.6 வினாடிகள் லாங்க் ரேஞ்ச் எடுத்துக் கொள்ளும், ஸ்டாண்டர்டு மாடல் 5.9 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.
ஸ்டாண்டர்டு மாடல் 500 கிமீ WLTP ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் வேரியண்ட் 622 கிமீ WLTP சான்றிக்கப்பட்டுள்ளது. DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 15 நிமிடங்களில் 238 கிமீ பயணிக்கின்ற சார்ஜ் பெறலாம்.
மும்பை மற்றும் டெல்லியில் தலா நான்கு சார்ஜிங் நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது, இரு நகரங்களிலும் மொத்தம் 16 சூப்பர்சார்ஜர்கள் உள்ளன. கூடுதலாக, மும்பையில் 16 டெஸ்டினேஷன் சார்ஜர்கள் நிறுவப்படும், டெல்லியில் 15 இருக்கும் என தெரிவித்துள்ளது.
மாடல் Y மின்சார கார் 4,790 மிமீ நீளம், 1,982 மிமீ அகலம் மற்றும் 1,624 மிமீ உயரம் கொண்டது, 167 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் உடன் 19 அங்குல வீல் பெற்று மற்றும் ஸ்டாண்டர்ட் வேரியண்டிற்கு 1,928 கிலோ எடையும், லாங் ரேஞ்சிற்கு 1,901 கிலோ எடையும் உள்ளது.
மாடல் ஓய் வாரண்டி
லேன்-கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், தானியங்கி அவசரகால பிரேக்கிங், பிளைண்ட்-ஸ்பாட் கண்காணிப்பு மற்றும் முன்னோக்கி மோதல் எச்சரிக்கை என பல்வேறு ADAS சார்ந்த பாதுகாப்பினை பெற்றுள்ளது.
இந்நிறுவனம் 4 ஆண்டுகள் அல்லது 80,000 கிமீ வாகனத்துக்கான வாரண்டி வழங்குகின்ற நிலையில், இதற்கிடையில், பேட்டரி மற்றும் மோட்டார் உள்ளிட்டவற்றுக்கு 8 ஆண்டுகள் அல்லது 1,92,000 கிமீ உத்தரவாதத்துடன் வருகிறது.
குறிப்பாக, இந்த மாடல் Y நடுத்தர எஸ்யூவிக்கு மிகுந்த சவால் விடுக்கும் BYD நிறுவன சீலயன் 7 மாடல் ரூபாய் 49 லட்சம் முதல் ரூ.54 லட்சம் வரை ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் கிடைக்கின்றது.