இந்தியாவின் ஹூண்டாய் நிறுவன புதிய தலைமுறை வெனியூ எஸ்யூவி அக்டோபர் 24 ஆம் தேதி வரவுள்ளதால், தற்பொழுது வரை கிடைத்துள்ள முக்கிய விபரங்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம். குறிப்பாக புதிய மாடலில் டிசைன், வசதிகள் என பலவற்றில் பெரிய மாறுதல்கள் இருக்கும், மற்றபடி எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இருக்காது.
வெனியூ எஸ்யூவி மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று ஆப்ஷன்களை கொண்டிருப்பதுடன் மேனுவல், ஏஎம்டி மற்றும் ஆட்டோமேட்டிக் பெற்றிருக்கும், கூடுதலாக இந்த முறை சிஎன்ஜி ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, இந்த மாடலின் போட்டியாளர்களான மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், XUV 3XO மஹிந்திரா, ஸ்கோடா கைலாக், மற்றும் கியா சொனெட் உள்ளிட்ட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளுகின்ற நிலையில் புதிய தலைமுறையில் முகப்பு தோற்ற க்ரெட்டா எஸ்யூவி காரிலிருந்து சில தோற்ற உந்துதல்களை கொண்டிருப்பதுடன், மிக முக்கியமாக புதிய கிரில், செங்குத்தான எல்இடி ரன்னிங் விளக்குடன் புராஜெக்டர் ஹெட்லைட் பெற்றிருக்கும்.
பக்கவாட்டில் புதுப்பிக்கப்பட்ட 16 அங்குல அலாய் வீல், சி பில்லர் பகுதியில் சிறிய மாற்றங்களுடன், பின்புறத்தில் புதிய பம்பர் உட்பட டெயில் விளக்குகள் என அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டிருக்கும்.
இன்டீரியர் வசதிகளில் தற்பொழுது வந்துள்ள கியா சிரோஸ், ஹூண்டாய் க்ரெட்டா போன்று மிக அகலமான டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றதாக அமைந்திருக்கலாம்.
அடிப்படையாகவே 6 ஏர்பேக்குகளுடன் உறுதியான கட்டுமானத்தை பெற்று BNCAP கிராஷ் சோதனைக்கு ஏற்றதாகவும் ஏபிஎஸ் உடன் இபிடி, இஎஸ்பி, ஹீல் ஹோல்டு அசிஸ்ட் ஆகியவற்றுடன் 360 டிகிரி கேமரா, புதுப்பிக்கப்பட்ட ADAS தொகுப்பு கொண்டிருக்கலாம்.
காற்றோட்டமான முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் சன்ரூஃப் ஆகியவற்றை பெற்ற 2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி ரூ.8 லட்சத்துக்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.