வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் முதல் காரை வருகின்ற சில மாதங்களில் வெளியிட உள்ள நிலையில் VF3, VF6, மற்றும் VF7 மூன்று கார்களை அடுத்தடுத்து சந்தையில் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றது.
வரும் ஜூன் மாத மத்தியில் முன்பதிவு ஆனது துவங்கப்பட்டு டெலிவரி அனேகமாக செப்டம்பர் அல்லது அதற்கு முன்பாக வழங்க திட்டமிட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக இந்நிறுவனத்தின் VF6 மற்றும் VF7 கார்கள் தமிழ்நாட்டின் முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட தூத்துக்குடியில் அமைந்துள்ள ஆலையில் சிகேடி முறையில் பாகங்களை தருவித்து ஒருங்கிணைத்து விற்பனை செய்ய உள்ளது. முதற்கட்டமாக ஆண்டுக்கு 50,000 உற்பத்தி இலக்கை நிர்ணயித்துள்ள இந்த மாடலானது, அடுத்தடுத்து வரும் காலங்களில் வெளிநாடு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதால் ஆண்டுக்கு 1,50,000 யூனிட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.
Vinfast VF6
ரூ.20 லட்சத்தில் வரவுள்ள வின்ஃபாஸ்ட் VF6 காரில் 59.6kWh பேட்டரி பொருத்தப்பட்டு ECO, Plus என இரு விதமான வேரியண்டடை பெற்றிருக்கின்ற நிலையில் 7 ஏர்பேக்குகள், ஹைவே அசிஸ்ட் என இந்நிறுவனத்தால் அழைக்கப்படுகின்ற Level-2 ADAS உள்ளது.
17 அங்குல வீல் பெற்ற ஈக்கோ வேரியண்ட் 178hp, 250Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 399கிமீ வெளிப்படுத்தும் என WLTP சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
19 அங்குல வீல் பெற்றதாக உள்ள பிளஸ் வேரியண்ட் 204hp, 310Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடல் 0-100 % சார்ஜில் 381 கிமீ ரேஞ்ச் கிடைக்கலாம் என WLTP சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
VinFast VF7
முதலில் வரவுள்ள ரூ.35 லட்சத்துக்கும் குறைந்த விலையில் வரவுள்ள 75.3kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 5 நபர்கள் பயணிக்கின்ற ஈக்கோ வேரியண்ட் 204hp, 310Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 450கிமீ வெளிப்படுத்தும் என WLTP சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
20 அல்லது 21 அங்குல வீல் பெற்ற பிளஸ் வேரியண்ட் AWD 354hp, 500Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடல் 0-100 % சார்ஜில் 431 கிமீ ரேஞ்ச் கிடைக்கலாம் என WLTP சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
VinFast VF3
3 கதவுகளை பெற்ற வின்ஃபாஸ்ட் VF3 காரின் ஆரம்ப விலை ரூ.10 லட்சத்துக்கும் குறைவாக அமைவதுடன் விற்பனைக்கு 2026 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.
32 kW பவர் மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற காரில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 205 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு 4 இருக்கை கொண்ட வின்ஃபாஸ்ட் விஎஃப்3 மாடலில் 10 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்ட வசதிகளுடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களையும் பெறுகின்றது.
2026 ஆம் ஆண்டின் மத்தியில் VF5, அதனை தொடர்ந்து 7 இருக்கை கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களை வெளியிட உள்ளது.
டீலர்கள் மற்றும் சார்ஜிங் நெட்வொர்க்
முதற்கட்டமாக அடுத்த சில மாதங்களுக்குள் 6 டீலர்களை துவங்க உள்ள நிலையில் பெரும்பாலான சார்ஜிங் அப்ரேட்டர் உடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் சார்பாக V-Green மூலம் 60kW முதல் 300kW வரையிலான DC ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை துவங்க திட்டமிட்டுள்ளது.
படிப்படியாக நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களில் டீலர்களை விரிவுப்படுத்தவும், உற்பத்தியை முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஆட்டோமொபைல் தமிழன் பார்வையில்..,
இந்தியாவில் மிக கடும் போட்டிகள் நிறைந்த சந்தையாக எலக்ட்ரிக் வாகனப் பிரிவு உருவெடுக்க உள்ள நிலையில் வின்ஃபாஸ்ட் தன்னை எவ்வாறு வேறுப்படுத்தி விற்பனை அதிகரிக்கும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.