இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளர்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவு வரும் ஆகஸ்ட் முதல் உற்பத்தியை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் திரு. ராஜீவ் பஜாஜ் எக்னாமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார்.
குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பிரத்தியேகமான அரிய வகை காந்தங்களுக்கான தடையை சீனா அறிவித்ததை தொடர்ந்து எலக்ட்ரிக் மோட்டார்களுக்கு பெறவேண்டிய காந்தங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதனால் தற்பொழுது உள்ள கையிருப்பு மூலம் ஜூலை இறுதிவரை மட்டுமே உற்பத்தி செய்யமுடியும்.
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் தனது இரு சக்கர வாகனம் சேட்டக் ஸ்கூட்டர் மற்றும் பஜாஜ் கோகோ எலக்ட்ரிக் ஆட்டோ போன்ற வாகனங்களின் உற்பத்தி நிறுத்தப்படுவதற்கு சூழல் உருவாகி உள்ளது என உறுதிப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பஜாஜ் ஆட்டோவின் பங்குகள் சரிவடைந்துள்ளது.
மேலும் அவர் தெரிவிக்கையில் மற்றொரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்றாலும் தற்பொழுது உள்ள தரத்தில் கிடைக்குமா அல்லது தரம் சார்ந்த மேம்பாடுகள் மற்றும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் விலையும் கூடுதலாக அமைந்தால் அந்த விலை உயர்வையும் வாடிக்கையாளர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மிகப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உலகின் அரிய வகை Neodymium (NdFeB) காந்தங்களில் 90 சதவீத பங்களிப்பை தற்போது வரை சீனாவை கொண்டிருக்கிறது. சேட்டக் மட்டுமல்ல டிவிஎஸ், ஏதெர் மற்றும் ஹீரோ உள்ளிட்ட நிறுவனங்களும் சிக்கலை எதிர்கொள்ளலாம். ஓலா எலக்ட்ரிக் தன்னிடம் கையிருப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.