வரும் ஜூலை 2025-ல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா பிராண்டின் கீழ் ஜீ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதை சமீபத்தில் நடைபெற்ற Q4 FY ’25 வருவாய் தொடர்பான கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முதன்முறையாக EICMA 2024ல் காட்சிப்படுத்தபட்ட ஜீ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.2kwh முதல் 4.4kwh வரையிலான திறன் பெற்ற மாறுபட்ட பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக கிடைக்க உள்ளது. Z இந்தியாவில் மட்டுமல்லாமல் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் விற்பனை செய்யும் முதல் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்க உள்ளது.
ஜீ மட்டுமல்லாமல் மற்றொரு குறைந்த விலை ஸ்கூட்டரை அடுத்த மூன்று முதல் 6 மாதங்களுக்கு ஹீரோ வெளியிட உள்ள நிலையில் கூடுதலாக டீலர் எண்ணிக்கையை உயர்த்தவும் திட்டமிட்டு வருகின்றது.
தற்பொழுது வரை விடா ஸ்கூட்டர்கள் குறிப்பிட்ட சில டீலர்கள் மற்றும் பிரீமியா என மொத்தமாக 400க்கு குறைவான எண்ணிக்கையிலான டீலர்களில் மட்டும் கிடைத்து மாதம் 6000-7000 வரையிலான விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.
கடந்த ஆண்டு, விடா 116க்கும் மேற்பட்ட நகரங்களில் 180க்கும் மேற்பட்ட டீலர்களையும் 203 டச் பாயிண்டுகளையும் கொண்டிருந்தது.
தற்பொழுது கிடைக்கின்ற விடா வி2 மாடல் 30க்கு மேற்பட்ட நகரங்களில் 20 % சந்தை பங்களிப்பையும், 60க்கு மேற்பட்ட நகரங்களில் 10% க்கு கூடுதலான சந்தை மதிப்பை பெற்றதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் 25,000 முதல் 30,000 யூனிட்டுகளை எட்டும்பொழுது பிரேக் இவனை எட்டும் என இந்நிறுவனம் குறிப்பிடும் நிலையில், இதற்கு அடுத்த சில ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளது.