Site icon Automobile Tamilan

சூப்பர் பைக் பிரியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் ஜிஎஸ்டி

நமது நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி நடைமுறை ஜூலை 1 முதல் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் பைக்குகள் மற்றும் 350சிசி திறனுக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள் விலை உயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சூப்பர் பைக் – ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி வரி என்றால் என்ன ? அதாவது நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக நாட்டில் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி வசூலிக்கப்படும்.

ஜிஎஸ்டி தொடர்பான  கூட்டத்தில் 1,211 பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரி விகிதம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. 5,% 12%, 18%, மற்றும் 28% என்ற சதவிகித அடிப்படையிலேயே நான்கு விதமான வரிகள் விதிக்கப்பட உள்ளன.

ஆட்டோமொபைல் துறை சார்ந்த வாகனங்கள், மோட்டார் சைக்கிள் , தனிநபர் பயன்பாட்டிற்கான ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மற்றும்  சொகுசு படகுகள் போன்றவற்றுக்கு 28 சதவிகித வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டை சார்ந்த டிராக்டர்களுக்கு 12 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகன சந்தையில் நாடு முழுவதும் 13 க்கு மேற்பட்ட மாறுதலான வரி நடைமுறையின் கீழ் அதிகபட்சமாக 25 சதவிகிதம் வரை உள்ள நடைமுறை புதிய ஜிஎஸ்டி வரவால் 28 சதவிகிதம் அடிப்படை வரியாக மாறியுள்ளது. எனவே அனைத்து இருசக்கர வாகனங்களின் விலையும் கனிசமாக உயரவுள்ளது.

மேலும் 350சிசி க்கு மேற்பட்ட திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் மாடல்களுக்கு 28 சதவிகிதம் அடிப்படை வரியுடன் கூடுதலாக 3 சதவிகிதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மொத்தமாக 31 சதவிகித வரி வசூலிக்கப்படும் என்பதனால் 350சிசி பைக்குகள் பிரிவுக்கு மேற்பட்ட பைக்குகளின் விலை உயரும் என்பதனால் சூப்பர் பைக் பிரியர்களுக்கு சற்று கூடுதல் விலை சுமையை பெறுவார்கள்.

 

Exit mobile version