எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்க வழங்கப்பட்டு வந்த FAME மானியம் பிஎம் இ-ட்ரைவ் (PM E-Drive – Electric Drive Revolution in Innovative Vehicle Enhancement) என்ற பெயரில் மாற்றப்பட்டு ரூ.10,900 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் எலெக்ட்ரிக் கார் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை.
கூடுதலாக, 3,435 கோடி ரூபாய் செலவில் 2028-29 வரை 38,000 மின்சார பேருந்துகளை இயக்க உதவும் PM-eBus சேவா பேமென்ட் செக்யூரிட்டி மெக்கானிசம் திட்டத்திற்கும் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
FAME-II மானியம் நிறைவடைந்த நிலையில் செப்டம்பர் 30 வரை EMPS 2024 தற்பொழுது செயல்பாட்டில் இருக்கும்.
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இந்த மானிய திட்டத்தில் பிஎம் இட்ரைவ் (PM E-Drive) மூலம் பல்வேறு சலுகைகளை புதிதாக எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குபவர்களும் மற்றும் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்து விட்டு புதிய மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கு இந்த சலுகைகளை இந்திய அரசின் கனரக போக்குவரத்து மற்றும் தொழில்துறை அமைச்சகம் வழங்குகின்றது.
e-2W, e-3W, e-ஆம்புலன்ஸ், e-பேருந்து, e-டிரக் மற்றும் பிற வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்க ரூ.3,679 கோடி மதிப்புள்ள மானியம் அல்லது ஊக்கத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 24.79 லட்சம் e-2W, 3.16 லட்சம் e-3W மற்றும் 14,028 இ-பஸ்களுக்கு ஆதரவளிக்கும்.
ரூ.4,391 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 14,028 மின்சார பேருந்துகளை மாநிலப் போக்குவரத்து கழகங்கள் மற்றும் பிற பொதுப் போக்குவரத்து அமைப்புகள் வாங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், சூரத், பெங்களூர், புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய 9 நகரங்களும் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டுள்ளதால் பொதுப் போக்குவரத்துக்கான தேவைக்கு ஏற்ப CESL மூலம் மாநிலங்களுடன் கலந்தாலோசித்து இன்டர்சிட்டி மற்றும் இன்டர்ஸ்டேட் இ-பஸ்களுக்கு மானியம் வழங்கப்படும்.
பேட்டரியில் செயல்படும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 22,100 ஃபாஸ்ட் சார்ஜர்களையும், மின்சார பேருந்துகளுக்கு 1,800 ஃபாஸ்ட் சார்ஜர்களையும், மின்சார இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 48,400 விரைவு சார்ஜர்களையும் 2,000 கோடி ரூபாய் செலவில் நிறுவுவதற்காகவும் முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது.
ஒவ்வொரு இருசக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு எவ்வளவு ஊக்கத்தொகை பிஎம் இ-டிரைவ் மூலம் கிடைக்கும் என்று விபரம் தற்பொழுது முழுமையாக வெளியிடப்படவில்லை. இது செப்டம்பர் இறுதி வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய இ-வவுச்சர் திட்டம்
EV வாங்குபவர்களுக்கு இ-வவுச்சர்களை அறிமுகப்படுத்தி, திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெறுகிறது. EV வாங்கும் போது, வாங்குபவரின் ஆதார் அங்கீகரிக்கப்பட்ட இ-வவுச்சரை வழங்கப்படும். வவுச்சரை பதிவிறக்குவதற்கான இணைப்பு வாங்குபவரின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
இ-வவுச்சரில் வாங்குபவர் கையொப்பமிட்டு, டீலரிடம் இத்திட்டத்தின் கீழ் சலுகையை பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு, இ-வவுச்சரும் டீலரால் கையொப்பமிடப்பட்டு PM E-DRIVE போர்ட்டலில் பதிவேற்றப்படும். கையொப்பமிடப்பட்ட மின்-வவுச்சர் வாங்குபவர் மற்றும் டீலருக்கு SMS மூலம் அனுப்பப்படும். கையெழுத்திட்ட வவுச்சரை கொண்டு இந்த திட்டத்தின் கீழ் கோரிக்கை விடுக்கப்பட்டு ஊக்கத்தொகைகளை வாகனங்களின் தயாரிப்பாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.