மென்சா லூகேட் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2018

இந்தியாவில் இரண்டு சக்கர மின்சார வாகன விற்பனை அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் பவரை வெளிப்படுத்தும் பெர்ஃபாமென்ஸ் ரக மின்சார பைக்குகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் மென்சா மோட்டார்ஸ் எனும் ஸ்டார்-அப் நிறுவனம் கஃபே ரேஸர் தோற்ற வடிவமைப்பினை பின்பற்றி மென்சா லூகேட் எலக்ட்ரிக் பைக் மாடலை ரூ.2.80 லட்சம் விலையில் வெளியிட்டுள்ளது.

மென்சா லூகேட் பைக்

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் தொடங்கப்பட்டுள்ள மென்சா மோட்டார்ஸ் எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் 2018 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பேடிஎம் மால் இணையதளத்தில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

பேடிஎம் மால் வாயிலாக ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்யும்பட்சத்தில் மார்ச் மாத மத்தியில் டெலிவரி தொடங்கப்பட உள்ள லூகேட் பைக்குகள் முதற்கட்டமாக பெங்களூர், புனே, லக்னோ, கோவா, மும்பை, டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத், போபால், அம்ரித்ஸர், சண்டிகர், நைனிடால் மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்கில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

ரூ.2,79,999 விலையில் வெளியிடப்படுள்ள மோட்டார்சைக்கிளை ரூ.1,79,999 விலையில் வாங்கும் வகையிலான வசதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாங்கும்போது ரூ.4000 மாதந்தோறும் பேட்டரிக்கு வாடகையை செலுத்த வேண்டியிருக்கும்.

லூகேட் பைக்

வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் ஃபேபரிங் பாடி, இருக்கை உயரம், ஃபூட் ரெஸ்ட் ஆகியவற்றை பொருத்திக்கொள்வதுடன் 77 வண்ணங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் பாடி நிறத்தை தேர்ந்தெடுக்கலாம்.

முழுமையான வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், மிக அகலமான தொடுதிரை இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், முன்புறத்தில் WP ஃபோர்க்குகள், மற்றும் கஸ்டம் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்றுள்ள 17 அங்குல வீலுடன் 153 கிலோ எடையை கொண்ட பைக்கின் முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில்  230 மிமீ டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது.

லூகேட் பைக்கில் காற்று மூலம் குளிர்விக்கும் வகையில் ப்ரூஸ்லெஸ் டிசி மோட்டார் கொண்டு 18 kW (24 bhp) பவர் மற்றும் 60 Nm டார்க் வெளிப்படுத்தும். 72 வோல்ட் லித்தியம் ஐயன் பேட்டரி 100 கிமீ தொலைவினை நகரங்களில், 150 கிமீ தொலைவினை நெடுஞ்சாலையில் பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்குகின்றது.

மென்சா லூகேட் எலக்ட்ரிக் பைக் ரூ. 2.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

Recommended For You