தற்பொழுது இந்தியாவில் 125சிசிக்கு மேற்பட்ட என்ஜின் கொண்ட மாடல்களில் மட்டும் கட்டாயம் என உள்ள நிலையில், இனி அனைத்து மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் என அனைத்து இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக ஜனவரி 1, 2026 சேர்க்கப்பட வேண்டும், புதிய இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு இரு ஹெல்மெட் கட்டாயம் தர வேண்டும் என அரசாங்கத்தால் புதிய பாதுகாப்பு ஒழுங்குமுறை முன்மொழியப்பட்டுள்ளது.
எனவே, நமது இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இது தொடர்பான முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ABS (பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு)
ஏபிஎஸ் (Anti-Lock Braking System) எனப்படுவது அவசரகால பிரேக்கிங் சமயத்தில் சக்கரங்கள் பூட்டிக் கொள்ளாமல் தடுக்க உதவுகின்றது. இதனால் வாகனம் நிலை தடுமாறுவதை தடுக்கவும், மிக குறுகிய தூரத்தில் வாகனம் நிற்க உதவுவதனால் பெருமளவு விபத்துகளை தடுக்கப்படுகின்றது.
ஏபிஎஸ் வாகனம் விபத்தில் சிக்கும் வாய்ப்பு 35% முதல் 45% வரை குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கிடைக்கின்ற 100cc, 110cc, 125cc போன்ற பிரிவுகளில் உள்ள பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களில் ஏபிஎஸ் கொடுக்கப்படுவதில்லை, அதாவது புதிதாக விற்பனை செய்யப்படுகின்ற 40% டூ வீலர்களில் ஏபிஎஸ் கிடையாது. ஆனால் ஒரு சில 125சிசி பைக்குகளில் மட்டும் கிடைக்கின்றது.
ஆனால் வரும் நாட்களில் ஏபிஎஸ் கட்டாயம் என்ற நடைமுறைக்கு வந்தால் அனைத்து இரு சக்கர வாகனங்களும் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும். இதனால் ஏபிஎஸ் பெறும் பொழுது இரு சக்கர வாகனங்களின் விலை மேலும் உயரக்கூடும். குறிப்பாக ஸ்கூட்டர்களின் விலை ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை உயர்ந்து மிகப்பெரிய தாக்கத்தை எற்படுத்தலாம்.
ஏபிஎஸ் மட்டுமல்ல இனி டூ வீலர் வாங்கினால் இரண்டு BIS சான்றிதழ் பெற்ற ஹெல்மெட் கட்டாயம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.