புதிய XUV500, ஃபன்ஸ்டெர் EV உட்பட 18 வாகனங்களை வெளியிடும் மஹிந்திரா

mahindra auto expo 2020

2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் மஹிந்திரா நிறுவனம், மிகுந்த முக்கியத்துவத்தை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்க உள்ள நிலையில் புதிய எக்ஸ்யூவி 500, எலெக்ட்ரிக் எக்ஸ்யூவி 500, குவாட்ரிசைக்கிள் ஆட்டாம் இவி, இகேயூவி100, இஎக்ஸ்யூவி300 போன்றவை முன்னிலை பெற உள்ளது.

ஃபோர்டு மற்றும் மஹிந்திரா கூட்டணியில் உருவாக்கப்படுகின்ற புதிய தலைமுறை எக்ஸ்யூவி 500 காரின் உற்பத்தி நிலை மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அதன் அடிப்படையில் தயாராகவுள்ள எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த சில மாதங்களுக்குள் புதிய கேயூவி 100 எலெக்ட்ரிக், அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் வெளியாக உள்ள எலெக்ட்ரிக் எக்ஸ்யூவி 300 போன்றவற்றை வெளியிட உள்ளது.

300 ஹெச்பி பவரை வழங்கவல்ல மஹிந்திரா ஃபன்ஸெடர் எலெக்ட்ரிக் கான்செப்ட் வெளியிடப்படுகின்றது. இந்த கான்செப்ட் மாடல் 60kWh பேட்டரியடன் ஒவ்வொரு சக்கரத்துக்கும் தனித்தனியான மின்சார மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும்.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இ கேயூவி 100 எஸ்யூவி காரில் குறிப்பிட்டபடி, 40 கிலோவாட் லித்தியம் ஐயன் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் கொண்டு 53 ஹெச்பி பவர் மற்றும் 120 என்எம் டார்க் வெளிப்படுத்தலாம். சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 120 கிமீ – 140 கிமீ தொலைவு வரை செல்லும் திறன் கொண்டதாக விளங்கும். 80 சதவீத சாரஜ் ஏறுவதற்கு சுமார் 60 நிமிடங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வழிவகுக்கும் விரைவு சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

இதுதவிர, இந்நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் எலக்ட்ரிக் குவாட்ரிசைக்கிள் ரக மஹிந்திரா Atom உட்பட பல்வேறு எலக்ட்ரிக் கான்செப்ட் மாடல்களை காட்சிப்படுத்த வாய்ப்புள்ளது.