ஆட்டோ எக்ஸ்போ 2018 பற்றி அறிந்து கொள்ளுங்கள் – Auto Expo 2018

வருகின்ற பிப்ரவரி மாதம் 9ந் தேதி முதல் 14ந் தேதி வரை உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர்  நொடய்டாவில் உள்ள இந்தியன் எக்ஸ்போ மார்டில் ஆட்டோ எக்ஸ்போ 2018 – தி மோட்டார் ஷோ நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் பல்வேறு புதிய கார்கள், எஸ்யூவி, இரு சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் உட்பட மின்சார வாகனங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2018

சர்வதேச மோட்டார் கண்காட்சிகளில் மிக முக்கியமான எக்ஸ்போவாக விளங்கும் டெல்லி எக்ஸ்போவில் இந்த ஆண்டில் 24க்கு அதிகமான புதிய வாகனங்கள் மற்றும் 100 க்கு மேற்பட்ட வாகனங்கள் காட்சிக்கு வரவுள்ளது. கடந்த ஆண்டில் 5 லட்சத்துக்கு அதிகமான பார்வையாளர்களை கவர்ந்த 2016 ஆட்டோ எக்ஸ்போவை விட கூடுதலான பார்வையார்களை அதாவது 7 லட்சம் முதல் 9 லட்சம் வரையிலான பார்வையாளர்கள் காணக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Co-Create, Co-Exist மற்றும் Celebrate என்ற தீமை மையமாக கொண்டு செயற்படுத்தப்பட உள்ள இந்த வருட மோட்டார் வாகன கண்காட்சியை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி சங்கம் (SIAM), தானியங்கி உபகரண உற்பத்தியாளர்கள் சங்கம் (ACMA) மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து ஒருங்கிணைத்துள்ளது.

இந்த வருடம் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ சுமார் 1,85,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெற உள்ள நிலையில் 5,789 சதுர மீட்டர் என்ற அதிகபட்ச பரப்பளவை இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் , பயணியர் வாகனம், மின்சார வாகனங்களை காட்சிப்படுத்துவுதுடன்,  இந்நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஜாகுவார், லேண்ட் ரோவர் பிராண்டு வாகனங்களும் இடம்பெற உள்ளது.

டாடாவை தொடர்ந்து இந்தியாவின் முதன்மையான பயணியர் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி இந்தியா லிமிடேட் 4,120 சதுர மீட்டர் பரப்பளவை பெற்றுள்ளது. இது முந்தை ஆண்டை விட 983 சதுர மீட்டர் கூடுதலாகும்.

இருசக்கர வாகன பிரிவில் தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் கம்பெனி அதிகபட்சமாக 1,352 சதுர மீட்டரை பெற்றுள்ளது.இந்நிறுவனம் புதிய கான்செப்ட்கள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களை காட்சிப்படுத்த உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவை தவிர்க்கும் முன்னணி தயாரிப்பாளர்கள்

இந்தியாவின் பல்வேறு பிரிவுகளில் வாகனங்களை தயாரித்து வரும் முன்னணி நிறுவனங்களும் இந்த வருட எக்ஸ்போவில் பங்கேற்பதனை தவிர்த்துள்ளது.

குறிப்பாக உலகின் முதன்மையான ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் வோக்ஸ்வேகன், ஆடி,ஸ்கோடா,மேன் டிரக்ஸ் மற்றும் ஸ்கேனியா ஆகிய நிறுவனங்களை தவிர நிசான், டட்சன், ஃபியட்கிறைஸலர் , ஃபோர்டு, ஜீப் ஆகிய நிறுவனங்களுடன் இரு சக்கர வாகன தயாரிப்பாளர்களான ராயல் என்ஃபீல்டு,பஜாஜ் ஆட்டோ, ஹார்லி டேவிட்சன் மற்றும் டிரையம்ப் ஆகிய நிறுவனங்களுடன் முன்னணி வர்த்தக வாகன தயாரிப்பாளர்களான டைம்லர் பென்ஸ், வால்வோ மற்றும் இந்தியாவின் பாரத் பென்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காட்சியை தவிர்த்துள்ளன.

பெரும்பாலான வாகன தயாரிப்பாளர்கள் கண்காட்சியை புறக்கணிக்க எக்ஸ்போவிற்கு வசூலிக்கப்படுகின்ற கட்டணம் மிக அதிகமாக உள்ளதாக கருதுவதே காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறை

அடுத்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் விற்பனையை தொடங்க திட்டமிட்டுள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனம் முதன்முறையாக எக்ஸ்போவில் பங்கேற்கின்றது. இதுதவிர இரு சக்க ர வாகன பிரிவில் இந்தியா கவாஸாகி மற்றும் டொயோட்டா லெக்சஸ் வாகனங்களும் காட்சிக்கு வரவுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ டிக்கெட் கட்டணம்

பொதுமக்கள் பார்வை நேரம்  – மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை மற்றும் கட்டணம் ரூ.350 ஆகும்.

பிஸ்னஸ் பார்வை நேரம் – காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் கட்டணம் ரூ.750 ஆகும்.

வார இறுதி நாட்களில் பொதுமக்கள் பார்வை நேரம் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மற்றும் கட்டணம் ரூ.475 ஆகும்.

கண்காட்சி இறுதி நாள் பிப்ரவரி 14, 2018 அன்று மட்டும்  ரூ.450 டிக்கெட் கட்டணம் ஆகும்.

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வோருக்கு இலவசமாக வீட்டிற்கு வந்து டிக்கெட்டுகள் ஜனவரி 8 முதல் டெலிவிரி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1,85,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெற உள்ள மோட்டார் வாகன கண்காட்சியில் புதிய இரு சக்கர வாகனங்கள் மற்றும் கான்செப்ட், கார்கள், சூப்பர் கார்கள் மற்றும் எஸ்யூவி உட்பட வர்த்தக வாகனங்கள், நவீன நுட்பங்கள் மற்றும் ஆட்டோ நிறுவனங்களின் எதிர்கால திட்டங்கள் என பல்வேறு தகவல்கள் வெளியாக உள்ளது.

Booking url :- https://in.bookmyshow.com/exhibition/auto-expo-the-motor-show/

தொடர்ந்து ஆட்டோமொபைல் தமிழன் தளத்துடன் இணைந்திருங்கள் ஆட்டோ எக்ஸ்போ 2018 செய்திகளை படிக்க

Exit mobile version