சாகசப் பிரியர்கள் விரும்பும் சுஸுகி-யின் ஸ்போர்ட்ஸ் பைக்

சுஸுகி நிறுவனம் சாகசப் பிரியர்களுக்கென 4 மாடல்களில் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்துகிறது. இவை அனைத்துமே இறக்குமதி செய்யப்படுபவை ஆகும். பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு அசெம்பிள் செய்யப்பட்டு விற்கப்பட உள்ளன. சில டீலர்களிடம் இத்தகைய மோட்டார் சைக்கிள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆர்எம்- இஸட்250 ரக மோட்டார் சைக்கிளை சில விநியோகஸ்தர்கள் காட்சிக்கு வைத்துள்ளனர். இதில் சிறுவர்களுக்கான 50 சிசி மோட்டார் சைக்கிளும் அடங்கும். இதன் விலை ரூ. 2.65 லட்சமாகும். இது டிஆர் – இஸட் 50 என்ற பெயரில் வந்துள்ளது.

அடுத்த மாடல் ஆர்எம்-இஸட் 250 ஆகும். இதன் விலை ரூ. 7.20 லட்சம். இவை இரண்டு மாடல் தவிர ஆர்எம் – இஸட் 450 மாடல் (விலை ரூ. 8.40 லட்சம்) மற்றும் ஆர்எம்எக்ஸ் 450 இஸட் (விலை ரூ. 8.75 லட்சம்) ஆகிய மாடல்களையும் அறிமுகப்படுத்த உள்ளன.

இந்த மோட்டார் சைக்கிள்கள் எதையும் வழக்கமான மோட்டார் சைக்கிளைப் போல சாலைகளில் ஓட்ட முடியாது. இவற்றை சாலைகளில் ஓட்டுவதற்கு அனுமதி கிடையாது. ஏனெனில் வழக்கமான பைக்குகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் அதாவது பொது வெளியில் ஓட்டுவதற்கு என சில விதி முறைகள் உள்ளன. ஆனால், இவற்றுக்கு முகப்பு விளக்கு மற்றும் பின்புற விளக்குகள் கிடையாது.

அதேபோல எந்தப் பக்கம் திரும்புகிறது என்பதை உணர்த்தும் இன்டிகேட்டர் விளக்கும் கிடையாது. இதனால் இவற்றை சாலைகளில் ஓட்டுவதற்கு அனுமதி கோரி பதிவு செய்ய முடியாது. மேலும் வழக்கமான சாலைகளில் ஓட்டுவதற்கேற்ற டயர்களும் இதில் கிடையாது. இதனால் இவற்றை பொழுது போக்கிற்காக அல்லது பந்தயங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இதில் டிஆர் – இஸட்50 மினி பைக் சிறியவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இது 49 சிசி திறன் கொண்டது. நான்கு ஸ்டிரோக், ஏர் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜின் உள்ளது. இதன் எடை 54 கிலோ மட்டுமே. இதன் சீட் இரண்டு அடிக்கும் குறைவான உயரத்தில் இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாடல் ஆர்எம்-இஸட் 250. இது 250 சிசி திறன் கொண்டது. நான்கு ஸ்டிரோக், லிக்விட் கூல்டு, ஒற்றை சிலிண்டர் இன்ஜின் உடையது. சாகசப் பயணத்துக்கான முழுமையான பைக் இது. இதன் எடை 106 கிலோவாகும். இதன் முன்பகுதி மற்றும் பின் பகுதி சஸ்பென்ஷன்களை அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.

மூன்றாவது மாடல் ஆர்எம்-இஸட் 450 இது 449 சிசி திறன் கொண்ட நான்கு ஸ்டிரோக், லிக்விட் கூல்டு, ஒற்றை சிலிண்டர் இன்ஜின். இதுவும் சாகசப் பயணத்துக்கானதுதான். 125 சிசி மொபெட் போன்ற தோற்றத்துடன் 112 கிலோ எடை கொண்டது. இன்னொரு மாடல் ஆர்எம்எக்ஸ் 450 இஸட். இதில் மட்டும் முகப்பு விளக்கு உள்ளது.

Exit mobile version