ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்

ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்

180சிசி-200சிசி சந்தையில் முதல் மாடலாக ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் விற்பனைக்கு ரூ.1.30 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஹார்னெட்டின் வெற்றியை தொடர்ந்து வந்துள்ள புதிய 2.0 மாடல் 184சிசி என்ஜின் கொண்டுள்ளது.

இந்தியாவின் பிரீமியம் மோட்டார்சைக்கிள் சந்தையின் விற்பனை எண்ணிக்கை கனிசமாக உயர்ந்து வரும் நிலையில் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, பல்சர் என்எஸ் 200 என இரு மாடல்களும், கூடுதலான பிரீமியம் பிரிவில் 200 டியூக் போன்றவை இடம்பெற்றுள்ளது. இந்த மாடல்களை எதிர்கொள்ள ஹோண்டா தனது முதல் மாடலை வெளியிட்டுள்ளது.

டிசைன்

விற்பனையில் கிடைத்த முந்தைய சிபி ஹார்னெட் 160 ஆர் மாடலின் வெற்றியை தொடர்ந்து சர்வதேச அளவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு CBF190R மாடலின் வடிவ உந்துதலை பெற்று மிகவும் நேர்த்தியான ஷார்ப் எட்ஜ் கொண்டுள்ளது. புதிய ஹார்னெட் 2.0 மாடலின் அனைத்து விளக்குகளும் எல்இடி ஆக வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ் வடிவ பெற்ற எல்இடி டெயில் லைட், டர்ன் இன்டிகேட்டர் என அனைத்தும் எல்இடி ஆக விளங்குகின்றது.

மிகவும் கூர்மையான தோற்ற பொலிவினை வழங்கும் நோக்கில் கொடுக்கப்பட்டுள்ள டேங்க் எக்ஸ்டென்ஷன் அதனுடன் சேர்க்கப்பட்ட ஹார்னெட் டிகெல்ஸ் கூடுதல் கவர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்தும் ஸ்பிளிட் சீட் பெற்ற இந்த பைக்கில் கருப்பு, சிவப்பு, ப்ளூ மெட்டாலிக் மற்றும் கிரே மெட்டாலிக் என நான்கு நிறங்களை கொண்டுள்ளது.

ஹோண்டா ஹார்னெட் 2.0 இன்ஜின்

பிஎஸ்-6 ஆதரவை பெற்ற ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் உள்ள 184சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு PGM-FI HET (Honda Eco Technology) இன்ஜின் 8500 RPM சுழற்சியில் 17.03 ஹெச்பி பவர் மற்றும் 6000 RPM சுழற்சியில் 16.1 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மிக சிறப்பான டார்க் மற்றும் பவரை வழங்குகின்ற இந்த மாடல் 0-200 மீட்டர் தொலைவை எட்டுவதற்கு வெறும் 11.25 விநாடிகள் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசதிகள்

டைமன்ட் டைப் ஃபிரேமில் வடிவமைக்கப்பட்டுள்ள ஹார்னெட் 2.0வில் பகல், இரவு நேரங்களில் தெளிவாக காட்சிக்கு கிடைக்கும் வகையில் நெகட்டிவ் எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு கியர் பொசிஷன் இன்டிகேட்டர், சர்வீஸ் இண்டிகேட்டர், பேட்டரி இருப்பினை அறியும் வசதி இடம்பெற்றுள்ளது.

சஸ்பென்ஷன் அமைப்பினை பொறுத்தவரை முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்ட யூஎஸ்டி ஃபோர்க்கு கவர்ச்சிகரமாக விளங்குவதுடன், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் இணைக்கப்பட்டுள்ளது.

இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு, முன்புறத்தில் 276 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

17 அங்குல அலாய் வீல் பெற்று முன்புறத்தில் 110/70 டயர் மற்றும் பின்புறத்தில் அகலமான 140/70 டயர் கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி (ரூ.1.29 லட்சம்)மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ் 200 (ரூ.1.29 லட்சம்) மாடல்களை எதிர்கொள்ள உள்ள புதிய ஹார்னெட் 2.0 பைக்கிற்கு மற்றொரு போட்டியாக விரைவில் வரவுள்ள பிஎஸ்-6 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் விளங்க உள்ளது.

போட்டியாளர்களாக விளங்குகின்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மாடலை தவிர மற்றவை மிக சிறப்பான பவர் மற்றும் பல்வேறு நவீனத்துவமான வசதிகளை பெற்றதாக விளங்குகின்றது.

விலை

புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கின் விலை ரூ.1.30 லட்சம் (எக்ஸ்ஷோரூம் சென்னை) ஆகும். முந்தைய ஹார்னெட் 160ஆர் மாடலை விட ரூ.31,000 கூடுதலாக அமைந்துள்ளது.

Exit mobile version