Automobile Tamil

பிஎஸ்6 மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியானது

maruti swift

பலேனோ காரை தொடர்ந்து பிஎஸ்6 பெட்ரோல் என்ஜினை மாருதியின் ஸ்விஃப்ட் கார் பெற்று 5.14 லட்சம் ரூபாய் விலையில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பாரத் ஸ்டேஜ் 6 (Bharat Stage-VI) மாசு உமிழ்வு தரத்துக்கு இணையான என்ஜின் மட்டும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட உள்ளது.

டீசல் கார் உற்பத்தியை மாருதி கைவிட உள்ளதால் பெட்ரோல் வேரியண்டில் மட்டும் பிஎஸ் 6 நடைமுறைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட பேஸ் வேரியன்ட் விலை ரூ.15,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட் விலை அதிகபட்சமாக 4,000 வரை உயர்ந்துள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் விலை மற்றும் சிறப்புகள்

புதிய 1.2 லிட்டர் என்ஜின் பெற்ற K12B பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும், பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ந்து 83 PS பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜினில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ்களில் கிடைக்கின்றது.

முந்தைய பிஎஸ் 4 பெட்ரோல் என்ஜின் பெற்ற கார்கள் தொடர்ந்து கையிருப்பு உள்ள வரை மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது. பிரபலமான ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்-6 நடைமுறைக்கு மாற்றப்படும் வாய்ப்பில்லை. எனவே, படிப்படியாக டீசல் என்ஜின் கொண்ட ஸ்விஃப்ட் கார் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது.

பிஎஸ்-6 தவிர முக்கிய மாற்றமாக, ஸ்விஃப்ட் காரின் அனைத்து வேரியண்டிலும் அடிப்படையான பாதுகாப்பு அம்சமாக AIS-145 விதிகளுக்கு உட்பட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அனைத்து வேரியண்டிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உடன் கூடிய இபிடி, டூயல் ஏர்பேக், ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான இருக்கை பட்டை நினைவுப்படுத்துதல், ரியர் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம் போன்றவை நிரந்தரமாகியுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை ரூ.5.14 லட்சம் முதல் ரூ.8.89 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விற்பனை கிடைக்க உள்ளது.

Exit mobile version