அதிகபட்சம் மூன்று ஸ்டார் தான்.. இந்திய கார்களின் பரிதாபத்துக்குரிய தரம்

0

maruti-suzuki-ertiga

2019 #SaferCarsForIndia என்ற பெயரில் சர்வதேச கிராஷ் டெஸ்ட் மையம் சோதனை செய்த இந்திய கார் மாடல்களில் அதிகபட்சமாக எர்டிகா 3 நட்சத்திரத்தைப் பெற்றுள்ளது. நாட்டின் முதன்மையான மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா மற்றும் வேகன் ஆர், இரண்டாவது மிகப்பெரிய தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவன சான்ட்ரோ மற்றும் டட்சன் ரெடி-கோ கார்கள் குளோபல் கிராஷ் டெஸ்ட் மையத்தால் சோதனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக எர்டிகா கார் மட்டும் மூன்று நட்சத்திரத்தையும், வேகன் ஆர் மற்றும் சான்ட்ரோ என இரு மாடல்களும் இரண்டு ஸ்டார் மட்டும் பெற்றுள்ளது. குறைவான மதிப்பினை டட்சன் ரெடி-கோ ஒரு ஸ்டார் பெற்றுள்ளது.

மாருதி சுசுகி எர்டிகா

இந்தியாவின் பிரசத்தி பெற்ற எம்பிவி ரக மாடலான மாருதியின் எர்டிகா காரில் இரண்டு ஏர்பேக்குகளை பெற்ற மாடல் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச கிராஷ்டெஸ்ட் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வயது வந்தோரின் பாதுகாப்பில் மூன்று நட்சத்திரங்கள் பெற்றுள்ளது. இந்த எம்பிவியின் பாடிஷெல் நிலையற்றதாக குறிப்பிடுகின்றது. கால் வைக்கின்ற பகுதி நிலையற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. முன் இருக்கையில் அமர்ந்திருபவர்களுக்கு கால் மற்றும் ஓட்டுநரின் மார்பு பகுதிகளில் பாதுகாப்பு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் தலை மற்றும் கழுத்துப் பாதுகாப்பு நன்றாக இருக்கின்றது.

மூன்று வருட குழந்தைக்கான பாதுகாப்பு சிறப்பாக உள்ளது. ஆனால் 18 வயதுக்கு ஏற்ற டம்மி கொண்டு சோதனை செய்ததில் மார்பு மற்றும் தலை பகுதிகளுக்கு பாதுகாப்பு குறைவாக இருக்கின்றது.

மாருதி சுசுகி எர்டிகா காரின் பாதுகாப்பு தரம் 3/5 மட்டும்.

மாருதி சுசுகி வேகன் ஆர்

அதிகம் விற்பனை ஆகின்ற மற்றொரு மாருதி காரான வேகன் ஆர் பாதுகாப்பில் இரண்டு நட்சத்திரங்களை மட்டும் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த காரின் பாடி ஷெல் தரம் மிகவும் நிலையற்றதாக உள்ளது. மேலும் சோதனை செய்யப்பட்ட ஒரு ஏர்பேக் கொண்ட மாடல் கால்களுக்கு கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தும். 3 வயது குழந்தை மற்றும் 18 வயது நிரம்பிய சிறுவன் பாதுகாப்பில் மிகப்பெரிய அளவில் குறைபாட்டைக் கொண்டுள்ளது.

மாருதி சுசுகி வேகன் ஆர் காரின் பாதுகாப்பு தரம் 2/5 மட்டும்.

ஹூண்டாய் சான்ட்ரோ

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ காரும் 2 நட்சத்திரங்களை மட்டும் பெற்றுள்ளது. இந்த காரின் பாடி ஷெல் மற்றும் அடிப்பகுதி நிலைப்பு தன்மையற்றதாக உள்ளது. கழுத்து மற்றும் தலைப் பகுதி பாதுகாப்பினை மட்டும் வயது வந்தோருக்கு உறுதி செய்கின்றது. 3 வயது குழந்தை மற்றும் 18 வயது நிரம்பிய சிறுவன் பாதுகாப்பில் மிகப்பெரிய அளவில் குறைபாட்டைக் கொண்டுள்ளது.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பாதுகாப்பு தரம் 2/5 மட்டும்.

டட்சன் ரெடி-கோ

முன்பாக இந்நிறுவனத்தின் டட்சன் கோ கார் பூஜ்ய மதிப்பீட்டைப் பெற்றதால் கிராஷ் டெஸ்ட் மையத்தால் பாதுகாப்பற்ற காராக குறிப்பிடப்பட்ட நிலையில் தற்பொழுது ரெடி-கோ மாடல் ஒரு நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.  இந்த காரின் பாடி ஷெல் மற்றும் அடிப்பகுதி நிலைப்பு தன்மையற்றதாக உள்ளது.

டட்சன் ரெடி-கோ காரின் பாதுகாப்பு தரம் 1/5 மட்டும்.

கடந்த ஆண்டு கிராஷ் டெஸ் சோதனையில் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற கார்களில் டாடா நெக்ஸான் கார் மட்டும் 5 நட்சத்திரங்களை பெற்ற பாதுகாப்பான காராக அறிவிக்கப்பட்டது.