Automobile Tamilan

டப்பா கார்களுக்கு மத்தியில் கெத்தான இந்திய கார்.. எக்ஸ்யூவி 300

xuv300 safer choice award

இந்திய கார்கள் மிகவும் பாதுகாப்பு குறைவானவை என்ற வரலாற்றை மாற்ற துவங்கியுள்ளன, நம் நாட்டின் மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் குளோபல் என்சிஏபி சோதனையின் மூலம் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்று சர்வதேச அளவில் தங்கள் தரத்தை நிரூபித்துள்ளன.

டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் கார்கள் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றன. அந்த வகையில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 300 எஸ்யூவி கார் வயது வந்தோர் பாதுகாப்பில் 5 நட்சத்திரமும், குழந்தைகள் பாதுகாப்பில் 4 நட்சத்திரமும் பெற்று மிகப்பெரிய அளவில் தனது தரத்தை மஹிந்திரா நிரூபித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு குளோபல் என்சிஏபி மையத்தால் அறிவிக்கப்பட்ட ‘Safer Choice’  விருதினை முதன்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாடலுக்கு கிடைத்துள்ளது. இந்த விருதினை பெற அடிப்படை தகுதியாக, கார்கள் வயது வந்தோர் விபத்து பாதுகாப்புக்கு 5 நட்சத்திர மதிப்பீட்டையும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக குறைந்தபட்சம் 4-நட்சத்திர மதிப்பீட்டையும் கொண்டிருக்க வேண்டும். அதனை பூர்த்தி செய்த முதல் இந்திய மாடல் என்ற பெருமையை எக்ஸ்யூவி 300 மட்டுமே பெற்றுள்ளது.

குளோபல் என்.சி.ஏ.பி.யின் தலைமை நிர்வாக அதிகாரியும் தலைவருமான டேவிட் வார்ட் கூறுகையில், “இது மஹிந்திரா மற்றும் இந்திய வாகனத் தொழில்துறைக்கு ஒரு வரலாற்று தருணம், இது நாட்டிற்கான வாகன பாதுகாப்பு செயல்திறனில் ஒரு முக்கிய பங்களிப்பாக உள்ளது. 2018 ஆம் ஆண்டில் எங்கள் ‘பாதுகாப்பான தேர்வு’ விருது சவாலை அறிவித்த பின்னர் அந்த வரிசையில் ஒரு இந்திய வாகன உற்பத்தியாளர் இந்த விருதினை பெறுவது பாதுகாப்பிற்கு முன்னிலை வகிப்பதைக் கண்டு மிகவும் திருப்தியாக உள்ளது. ” என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version