Automobile Tamil

விரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது

மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ

இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகியின், மினி எஸ்யூவி மாடலாக எஸ் பிரெஸ்ஸோ விற்பனைக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தற்போது பல்வேறு விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் எஸ் பிரெஸ்ஸோவில் இடம்பெற உள்ள வசதிகளை பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த காரில் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு வரக்கூடும். கடந்த 2018 ஆம் ஆண்டு மாருதி காட்சிப்படுத்திய ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட்டை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ரெனோ க்விட், மஹிந்திரா கேயூவி 100 நெக்ஸ்ட் என இரண்டு மாடல்களை நேரடியாக எதிர்கொள்ள குறைவான விலையில் மிகவும் ஸ்டைலிங்கான அம்சத்தை பெற்றதாக இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

சமீபத்தில் வெளியான தகவலின் படி இந்த மாடல் 3,565 மிமீ நீளம், 1,520 மிமீ அகலம் மற்றும் 1,564 மிமீ உயரம் கொண்டது. ரெனால்ட் க்விட் உடன் ஒப்பிடுகையில், இது 114 மிமீ குறைந்த நீளம், 59 மிமீ அகலம் குறைவாக மற்றும் 86 மிமீ கூடுதல் உயரம் கொண்டது. இது 42 மிமீ குறுகிய வீல்பேஸைக் கொண்டுள்ளது, எஸ் பிரெஸ்ஸோவின் வீல்பேஸ் 2,380 மிமீ ஆகும். மேலும் இந்த காரில் 165/70 அளவைப் பெற்ற 14 அங்குல வீலை கொண்டிருக்கும்.

ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட் மாடலை பின்பற்றி பெரும்பாலான தோற்ற அம்சத்தை கேரிஓவராக பெற்றுள்ள இந்த எஸ்யூவி காரின் முகப்பு அமைப்பு மிகப்பெரிய காராக வெளிப்படுத்துவதற்கு ஏற்ற கிரில் அமைப்பு மற்றும் முன்புற பம்பரை கொண்டுள்ளது. மேலும், விட்டாரா பிரெஸ்ஸா காரில் உள்ளதைப் போன்ற முன்புற கிரிலை கொண்டதாக வரவுள்ளது. பாக்ஸ் வடிவத்தை கொண்ட ஹெட்லைட், எல்இடி ரன்னிங் விளக்குகள், மற்றும் பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கினை பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.

இன்டிரியரில், முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்பில் உள்ளதை போன்றே டார்க் கிரே நிறத்திலான டேஸ்போர்டின் மத்தியில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் 7.0 அங்குல இன்ஃபோடெயன்மென்ட் சிஸ்டம் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியா வசதியுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே போன்றவற்றை கொண்டிருக்கலாம். பேஸ் வேரியண்டில் ஸ்மார்ட்பிளே டாக் ஆடியோ சிஸ்டம் ப்ளூடூத் ஆதரவை கொண்டிருக்கலாம்.

மாருதி எஸ் பிரஸ்ஸோ காரில், மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் K10 B1.0 லிட்டர் பொருத்தப்பட்டு பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையாக விளங்கும். 50 கிலோவாட் (67.98 பிஎஸ்) அதிகபட்ச சக்தியை 5,500 ஆர்பிஎம் மற்றும் 90 என்எம் டார்க்கை 3,500 ஆர்.பி.எம்-ல் வழங்கும். இந்த மாடலில் 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வழங்கப்படும். சிஎன்ஜி மூலம் இயங்கும் எஸ்-பிரஸ்ஸோவை அடுத்த சில மாதங்களுக்கு பிறகு விற்பனைக்கு வெளயிடலாம்.

Std, LXi, VXi மற்றும் VXi+ என நான்கு வேரியன்டில் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் பொதுவாக ஏபிஎஸ், இரண்டு ஏர்பேக், ரியர் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டிருக்கும். கிவிட் காரை நேரடியாக எதிர்க்கும் வல்லமை பெற்ற எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஆரம்ப விலை ரூ.4.50 லட்சம் முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

image -autocarindia

Exit mobile version