Automobile Tamil

ஜிஎஸ்டி பேருந்து : பேருந்து கட்டணம் உயரும் அபாயம்..!

ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரியின் காரணமாக பொது போக்குவரத்து துறையின் முக்கிய வாகனமாக திகழும் பேருந்துகள் மற்றும் 10 நபர்கள் அல்லது அதற்கு கூடுதலான பயணிகளை திறன் பெற்ற வர்த்தக வாகனங்களுக்கு 43 % வரி விதிக்கப்பட உள்ளது.

ஜிஎஸ்டி பேருந்து

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி எனும் வரி விதிப்பின் மூலம் நாடு முழுவதும் ஒரே சீரான வரிமுறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில்5%, 12 %, 18% மற்றும் 28 % என  4 விதமான பிரிவுகளில் சரக்குகள் மற்றும் சேவைகளுக்காக வரி விதிப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு பிரிவுகளில் மோட்டார் வாகன துறைக்கு ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால் கார்கள் , இருசக்கர வாகனங்கள்,வர்த்தக வாகனங்கள், ஆடம்பர படகுகள் உள்பட அனைத்து  மோட்டார் துறையைச் சேர்ந்த வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் என அனைத்திற்கும் ஒரே பிரிவு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில்  டிராக்டர் மற்றும் மின்சார கார்களுக்கு 12 சதவிகித பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

GST பஸ்

மக்களின் அன்றாட் பயண தேவையை பூர்த்தி செய்கின்ற பொது போக்குவரத்து துறை பேருந்துகள், 10 அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகள் சுமக்கும் திறன் பெற்ற வாகனங்களுக்கு 28 % அடிப்படை ஜிஎஸ்டி-யுடன் கூடுதலாக 15 சதவீதம் செஸ் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள நடைமுறையின்படி பொது போக்குவரத்து வாகனங்களுக்கு 27.8 சதவிகித வரி விதிக்கப்படுகின்றது. இந்த வரி விதிப்பு மாநிலங்கள் வாரியாக மாறுபடும்.

இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளர் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” அரசு பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிப்பதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என கூறிவந்த நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள வரியினால் அரசு முன்பு குறிப்பிட்ட அறிக்கைக்கு எதிராகவே உள்ளதாக சியாம் நிர்வாக இயக்குநர் விஷ்னு மாத்தூர் தெரிவித்துள்ளார்.

அசோக் லேலாண்டு செய்தி தொடர்பாளர் கூறுகையில் இந்த வரி வதிப்பு நடைமுறைக்கு வரும்பட்சத்தில் வாகனங்களின் விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்பதனால் வாகன உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.

பொது போக்குவரத்து துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் ஆடம்பர கார்களுக்கு இணையாக பேருந்துகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் பேருந்து கட்டணம் மிகப்பெரிய அளவில் உயரும் வாய்ப்புகள் உள்ளது. சமீபத்தில் நமது தளத்தில் வெளியான விவசாயிகள் புறக்கணிப்பை போலவே நடுத்தர வர்கத்தை குறிவைத்தே இந்த நகர்வை அரசு மேற்கொண்டு வருகின்றது.

 

Exit mobile version