ஹோண்டா பைக் 18 மாடல்களை களமிறக்க ரூ.800 கோடி முதலீடு

0

இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், இரு சக்கர வாகன விற்பனையில் இரண்டாவது இடத்தையும், ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடத்தையுதம் பெற்று விளங்குகின்றது. இந்நிலையில் 2018-2019 ஆம் நிதி ஆண்டில் ரூ.800 கோடி முதலீடு வாயிலாக பிஎஸ்-6 மற்றும் புதிய மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை இந்திய மோட்டார் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஹோண்டா பைக்

ஜப்பான் நாட்டைச் சார்ந்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஹீரோ நிறுவனத்துடன் இணைந்த களமிறங்கி மாபெரும் வெற்றியை பதிவு செய்த நிலையில் ஹீரோ மற்றும் ஹோண்டா பிரிவுக்குப் பின்னர் உத்வேத்ததுடன் ஹோண்டா தனது பயணத்தை மேற்கொண்டு வருகின்றது.

Google News

ஸ்கூட்டர் சந்தையில் 50 சதவீதத்துக்கு கூடுதலான பங்களிப்பினை கொண்டிருக்கும் இந்நிறுவனம் 2018 ஆம் நிதி வருடத்தில் சுமார்  61,23,886 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து முந்தைய ஆண்டை விட 22 சதவீத கூடுதல் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஹோண்டா பைக் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், விற்பனையில் உள்ள மாடல்களின் மேம்படுத்தப்பட்ட கூடுதல் வசதிகளை பெற்ற புதிய மாடல்கள் மற்றும் புதிதாக ஒரு மோட்டார்சைக்கிள் என மொத்தமாக 18 பைக் மற்றும் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரவுள்ள பாரத் ஸ்டேஜ் 6 விதிகளுக்கு உட்பட்ட இன்ஜினை வடிவமைக்க தங்களது பணியை துரிதப்படுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டில் உதிரிபாகங்கள் உற்பத்தியை அதிகரிப்பதுடன், பிஎஸ் 6 இன்ஜினை வடிவமைத்து இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் சந்தையில் அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது. ஹோண்டா புதிதாக அறிமுகம் செய்ய உள்ள பைக் மாடல் 125சிசி எஞ்சினை அடிப்படையாக கொண்ட பிரிமியம் மாடலாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. அறிமுக தேதி குறித்தான விபரங்களை வெளியிடவில்லை.

ஹோண்டா இந்தியா முழுவதும் சுமார் 6000 டீலர்களை கொண்டுள்ள நிலையில், வரும் காலத்தில் ஊரக பகுதிகளில் டீலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயன்படுத்திய பைக் விற்பனை பிரிவாக செயல்படும் ஹோண்டா பெஸ்ட் டீல் எண்ணிக்கை தற்போது 250 ஆக உள்ளது. ஹோண்டா நிறுவனம் , இந்தியளவில் மிக சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகின்றது.