Site icon Automobile Tamil

80 லட்சம் டூ வீலர் விற்பனை செய்த ஹீரோ மோட்டோ கார்ப்

டூ வீலர் உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோ கார்ப் ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2018 வரையிலான 12 மாதங்களில் 80,39,472 டூ வீலர் வாகனங்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.

டிசம்பர் 2018 மாதந்திர விற்பனை முடிவில் ஹீரோ நிறுவனம், 4 சதவீத சரிவினை கண்டு மொத்தமாக 453,985 எண்ணிக்கையில் டூவீலரை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த டிசம்பர் 2017யில் ஹீரோ நிறுவனம் 472,731 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடவேண்டியதாகும்.

விற்பனை குறித்து ஹீரோ மோட்டோ கார்ப் தலைவர் Dr. பவன் முஞ்சால் கூறுகையில் ” சர்வதேச பொருளாதாரத்தில் 2018 ஆம் ஆண்டு மிகவும் சவாலான வருடமாகும். குறிப்பாக நாணயம் மற்றும் மூலப்பொருட்களின் ஏற்றத்தாழ்வுகளால் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது.  தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வாகன காப்பீடு கட்டனம் உயர்வு போன்ற காரணங்களால் விற்பனையில் பெரிதும் பின்னடைவு ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், வரவுள்ள பாரத் ஸ்டேஜ் 6 மாசு விதிமுறை நடைமுறைக்கு வரவுள்ளதால் இரு சக்கர வாகனங்கள் விலை உயர்வை சந்திக்க உள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பில் சொகுசு பிரிவு பட்டியலில் உள்ள இருசக்கர வாகனங்களை 28 சதவீத வரி விதிப்பிலிருந்து 18 சதவீதமாக குறைத்தால், மிக சிறப்பான வளர்ச்சி பாதையில் இரு சக்கர வாகன துறை பயணிக்கும். இதனால் லட்சகணக்கான வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள், எனவே  நிதி ஆண்டின் நான்காவது காலாண்டு சிறப்பான வளர்ச்சி பெறும் என குறிப்பிட்டுள்ளார்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனையில் ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2018 வரையிலான 12 மாதங்களில் மொத்தமாக 80,39,472 டூ வீலர் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மேலும் 2019 நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் சுமார் 60,37,901 டூவீலர்களை விற்பனை செய்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் ஹீரோ நிறுவனம் சந்தையில் மேஸ்ட்ரோ எட்ஜ் 125, எக்ஸ்பல்ஸ் 200, மற்றும் எக்ஸ்பல்ஸ் 200T ஆகிய மாடல்களை விற்பனைக்கு வெளியிட உள்ளது.

 

Exit mobile version