கோவிட்-19 பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் முன்னணி ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் குறைந்த அளவிலான பணியாளர்களை கொண்டு நாள் ஒன்றுக்கு ஒரு ஷிஃப்ட் முறையை துவங்கியுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு வாகன விற்பனை எண்ணிக்கை பூஜ்யத்தை பதிவு செய்திருந்த நிலையில், இம்மாதத்தில் உற்பத்தி துவங்கப்படுவதுடன் படிப்படியாக டீலர்களில் அடிப்படையான கோவிட்-19 பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திய பிறகு குறைந்த அளவிலான பணியாளர்களை கொண்டு டீலர்களும் விரைவில் துவங்கப்பட உள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஒரகடம் ஆலை ஒரு ஷிஃப்ட் முறையில் நிறுவனத்திற்கு அருகாமையில் உள்ள பணியாளர்களை கொண்டு அவர்களுக்கான அடிப்படையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் சமூக இடைவெளியுடன் துவங்கப்பட்டுள்ளது. மற்றபடி திருவொற்றியூர் மற்றும் வல்லம் வடகல் ஆலைகளின் உற்பத்தியை படிப்படியாக அரசின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு துவங்க உள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் சக்கன் ஆலை குறைந்த பணியாளர்களுடன் துவங்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, டொயோட்டா, டிவிஎஸ் மோட்டார், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, யமஹா, ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை துவங்க உள்ளன.