Automobile Tamilan

டெஸ்லா எலக்ட்ரிக் காரில் முதல்வர் எடப்பாடியார் பயணம்..!

Edappadi K Palaniswami

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது அமெரிக்காவில் சான் ஜோஸ் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பில் 2,300 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். மேலும் டெஸ்லா மற்றும் ப்ளூம் எனெர்ஜி போன்ற நிறுவனங்களை சுற்றி பார்த்துள்ளார்.

தமிழர் ஶ்ரீதரின் தலைமையின் கீழ் சான் ஜோஸ் நகரில் செயல்படும், ‘ப்ளூம் எனர்ஜி’ நிறுவனம், திரவ எரிபொருளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் உயரிய தொழில்நுட்பத்தை, இ-பே, அமேசான், கூகுள் நிறுவனங்களுக்கு வழங்கிவருகிறது.

இந்நிறுவனத்தைச் சுற்றிப் பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ப்ளூம் எனர்ஜி’ தொழில்நுட்பத்தைத் தமிழகத்திலும் செயல்படுத்திட ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் தொழில் தொடங்க அமெரிக்கத் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதை ஶ்ரீதரிடம் தெரிவித்த எடப்பாடி, “நம்ம ஊருலயும் வந்து தொழில ஆரம்பிங்க. இந்த மாதிரி தொழில்நுட்பத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கு. உங்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் நான் செஞ்சு தர்றேன்” என்று அழைப்புவிடுத்துள்ளார்.

எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’வின் தொழிற்சாலைக்குச் சென்ற எடப்பாடியார் குழு குஷியாகிவிட்டதாம். சான் பிரான்ஸிஸ்கோ அருகே ‘ப்ரீமோன்ட்’ பகுதியில் செயல்படும் இத்தொழிற்சாலையில், முழுவதும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய கார்களை ‘டெஸ்லா’ தயாரிக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 335 கி.மீ-க்குத் தடையில்லாமல் பயணம் செய்யக்கூடிய இக்கார்களைப் பார்த்து, எடப்பாடியார் அசந்துவிட்டாராம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், “டெஸ்லா கார்கள் தயாரிக்கப்படும் விதம், அதன் பாதுகாப்பு அம்சங்கள், ஒருமுறை சார்ஜ் செய்தால் பயணிக்கக்கூடிய தூரம், கார்களின் வேகம் குறித்தெல்லாம் முதல்வர் ஆர்வமாக கேட்டறிந்தார். ‘ஒருதடவை சார்ஜ் பண்ணா, சென்னையில இருந்து சேலத்துக்கு போய்விடலாம்போல’ என முதல்வர் கலகலக்க, ஏரியாவே குதூகலமானது.

தெற்காசியாவில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளின் சொர்க்கபூமியாகத் தமிழகம் திகழ்கிறது. ஹுண்டாயில் தொடங்கி, ஃபோர்டு வரையில் கார் தொழிற்சாலைகளும் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் தமிழகத்தில்தான் அமைந்துள்ளன. இவ்விவரங்களை எடுத்துக்கூறிய முதல்வர், டெஸ்லா நிர்வாகத்தினரைத் தமிழகத்திலும் தொழில் தொடங்க அழைத்தார்.

டெஸ்லா கார்களின் கைப்பிடிகள், டாஸ்போர்டு ஸ்க்ரீன் உள்ளிட்டவற்றை ஆச்சர்யமாகப் பார்த்த முதல்வர், ‘நாங்க இப்பதான் எங்க ஊர்ல எலெக்ட்ரிக் பஸ் விட்டிருக்கோம். அடுத்ததா கார்களையும்விட வேண்டியதுதான்’ என்றார். ஒரு குழந்தையின் குதூகலிப்புடன், டெஸ்லா காரில் முதல்வர் பயணமானது எங்களையெல்லாம் ஆச்சர்யப்படுத்தியது” என்றார்.

“ஏம்பா இதுல புகையே வராதாமே…” என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆச்சர்யத்துடன் கேட்க, “எலெக்ட்ரிக் கார்ல நச்சுப்புகை வெளியேற்றம் ரொம்ப குறைவு” என டெஸ்லா அதிகாரிகள் விளக்கியுள்ளனர். டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரியும் தமிழர்கள் பலரும் முதல்வரையும், அமைச்சர்களையும் ஆர்வத்துடன் சந்தித்து ‘செல்பி’ எடுத்துக் கொண்டார்களாம்.

நன்றி – விகடன்

Exit mobile version