இந்தியாவின் பெரும்பாலான கார்களில் பயன்படுத்தப்பட்ட ஃபியட் கிறைஸலர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் உற்பத்தியை ஃபியட் இந்தியா நிறுத்தியுள்ளது.

இந்தியாவின் முதன்மையான மாருதி சுசுகி துவங்கிய டாடா,ஃபியட், செவர்லே, மற்றும் பிரீமியர் போன்ற நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்ட இந்த என்ஜின் இந்தியாவின் குறைந்த திறன் பெற்ற டீசல் என்ஜின் சந்தையில் 50 சதவீத கார்களில் இடம்பெற்ற நாட்டின் தேசிய என்ஜின் என முடிசூடா மன்னனாக விளங்கி வருகின்றது. இந்நிலையில் ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ் 6 மாசு உமிழ்வு நடைமுறைக்கு மாற்றப்படாமல் இந்த என்ஜினை கைவிட ஃபியட் முடிவெடுத்திருந்தது.

ஃபியட் நிறுவனத்தின் ரஞ்சன்கோன் ஆலையில் தயாரிக்கப்பட்டு வந்த 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜினின் இறுதி யூனிட் என்ற புகைப்படத்தை இந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இந்த என்ஜின் எண் #810829 ஆகும்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, இக்னிஸ், எஸ்-கிராஸ், எஸ்எக்ஸ்4, சியாஸ், விட்டாரா பிரெஸ்ஸா ஆகியவை இந்த எஞ்சினைப் பெற்ற பிரபலமான மாருதி கார்களில் DDiS என பெயரிடப்பட்டிருந்தது. டாடா இந்த என்ஜினை குவாட்ராஜெட் என்ற பெயரில் இண்டிகா விஸ்டா மற்றும் இண்டிகோ மான்சாவுடன் வழங்கியதுடன், போல்ட் மற்றும் ஜெஸ்ட் மாடலுக்கு வழங்கியது. ஃபியட் புன்டோ மற்றும் லீனியாவும் இதே எஞ்சினுடன் மல்டிஜெட் என வந்தன. அடுத்தப்படியாக இந்தியாவிலிருந்து வெளியேறிய ஜெனரல் மோட்டார்ஸ் செவர்லே நிறுவனம் ஸ்மார்ட்டெக் என பெயரிட்டு செயில், யூவா என்ஜாய் கார்களிலும், பிரீமியர் நிறுவனத்தின் ரியோ மாடலில் CRDi4 என்ற பெயரில் இடம்பெற்றிருந்தது.

5 க்கு மேற்பட்ட தயாரிப்பாளர்களின் 25க்கு மேற்பட்ட கார்களில் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.