
ஹீரோ மோட்டோகார்ப்பின் விடா எலக்ட்ரிக் பிராண்டின் கீழ் வரவுள்ள முதல் பேட்டரி மின்சார இருசக்கர வாகனத்துக்கான கான்செப்ட்டினை EICMA 2025ல் வெளியிட உள்ள பெயரை யூபெக்ஸ் என அறிவித்து டீசரை வெளியிட்டு, திடீரென சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கியுள்ளது.
ஏற்கனவே கடந்த EICMA அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட விடா Z தற்பொழுது VX2 என பெயரில் கிடைக்கின்ற நிலையில், மற்ற மாடல்களான ஆஃப் ரோடுக்கு ஏற்ற விடா லினக்ஸ் மற்றும் ஏக்ரோ போன்ற டர்ட் பைக்குகளின் மாடல் விற்பனைக்கு வெளியாகலாம்.
Vida Ubex
சில மாதங்களுக்கு முன்பாக ஜீரோ மோட்டார்சைக்கிளுடன் இணைந்து ஹீரோ தயாரிக்க உள்ள விடா பைக்குகள் பற்றி முதலீட்டாளர் கருத்தரங்கில் குறிப்பிட்ட நிலையில், அந்த வரிசை வரவுள்ள முதல் பெர்ஃபாமென்ஸ் ரக மாடலாக யூபெக்ஸ் விளங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக வெளியிடப்பட்டுள்ள டீசர் நமக்கு சொல்லும் செய்தி, மிகவும் ஆக்ரோஷமான ஸ்போர்ட்டிவ் நேக்டூ ஸ்டைலை பெற்ற மாடலாக அமைந்திருப்பதுடன் இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு, முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் , பின்புறத்தில் மோனோஷாக் பெற்று மிகவும் ஏரோடைனமிக்ஸ் சார்ந்த வடிவமைப்புடன் 250-500cc க்கு இணையான ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸ் எலக்ட்ரிக் பைக்காக விடா வெளியிடும் என எதிர்பார்க்கின்றேன்.
வரும் EICMA 2025ல், ஹீரோ இதனை தவிர மிக முக்கியமான அட்வென்ச்சர் எக்ஸ்பல்ஸ் 421 மாடலை வெளியிட வாய்ப்புள்ளது.
முன்பே இந்நிறுவனம் குறிப்பிட்ட படி 2026-2027 அதாவது அடுத்த ஆண்டின் பண்டிகை காலத்தில் அல்லது 2027 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் நடைபெற உள்ள பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் உற்பத்தி நிலை யூபெக்ஸ் விற்பனைக்கு ரூ.3 லட்சத்தில் எதிர்பார்க்கலாம்.