விரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது மோட்டார்சைக்கிள் மாடல்களில் பாதுகாப்பு சார்ந்த அம்சங்கள் மற்றும் தரம் சார்ந்த விடயங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக் அம்சத்தை இணைக்க என்ஃபீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கிளாசிக் & தண்டர்பேர்டு

நீண்ட பாரம்பரிய மிக்க ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்திய சந்தையில் மத்திய அரசின் உத்தரவுப்படி 125சிசி மற்றும் அதற்கு கூடுதலான சிசி கொண்ட மாடல்களுக்கு ஏபிஎஸ் பிரேக் இணைப்பது கட்டயாமாகும் எனவே இதனை செயற்படுத்தும் வகையில் தனது மாடல்களில் ஏபிஎஸ் பிரேக் இணைப்பினை மேற்கொள்ள உள்ளது.

என்ஃபீல்டு நிறுவனம் தனது நாற்றாண்டு பாரம்பரியத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருப்பதனால் பெரும்பாலான நவீன வசதிகளை இணைப்பதில் தாமதம் காட்டி வரும் நிலையில் 117 ஆண்டுகளுக்கு பிறகு அலாய் வீல் மற்றும் ட்யூப்லெஸ் டயரை தண்டர்பேர்டு 350 மற்றும் 500 ஆகிய மாடல்களில் இணைத்துள்ளது. சமீபத்தில் கன் கிரே கிளாசிக் 350 மற்றும் ஸ்டெல்த் பிளாக் கிளாசிக் 500 ஆகிய இரு மாடல்களில் ரியர் டிஸ்க் பிரேக்கினை ஆப்ஷனலாக இணைத்துள்ள நிலையில், இனி கிளாசிக் 500 பைக்கில் பின்புற டிஸ்க் பிரேக் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளது.

அடுத்த சில மாதங்களில் கிளாசிக் 350, கிளாசிக் 500, தண்டர்பேர்டு 350, தண்டர்பேர்டு 500 மற்றும் ஹிமாலயன் ஆகிய பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக் எனப்படுகின்ற சக்கரங்கள் பூட்டிக் கொள்வதனை தடுக்கும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு சிங்கிள் சேனலில் இணைக்கப்பட உள்ளது.

ஆனால் அட்வென்ச்சர் ரக பைக் மாடலாக விளங்கும் ஹிமாலயன் பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வழங்கப்பட உள்ளது. இங்கிலாந்து சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹிமாலயன் பைக்கில் முன் மற்றும் பின் டயர்களில் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற புல்லட் 350 மாடலில் தற்போது வரை முன் மற்றும் பின் சக்கரங்களில் டிரம் பிரேக் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த மாடலில் ஏபிஎஸ் அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த மாடலில் செல்ஃப் ஸ்டார்ட் வசதியும் இல்லை.

அடுத்த சில மாதங்களில் வரவுள்ள கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டு ஆகிய மாடல்களில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட உள்ளதால், இதன் விலை ரூ.5000 வரை உயரவும், ஹிமாலயன் ரூ.12,000 வரை விலை உயர்த்தப்படவும் வாய்ப்புகள் உள்ளது.