ஜீப் காம்பஸ் பெட்ராக் விற்பனைக்கு வெளியானது

இந்திய பயணிகள் வாகன சந்தையில் எஸ்யூவி ரக விற்பனை அமோகமான வளர்ச்சி பெற்று வருகின்ற நிலையில், ஜீப் காம்பஸ் எஸ்யூவி 25,000 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்ததை முன்னிட்டு சிறப்பு பதிப்பாக ஜீப் காம்பஸ் பெட்ராக் ₹ 17.53 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

ஜீப் காம்பஸ் பெட்ராக்

ஃபியட் கிறைஸலர் குழுமத்தின் ஜீப் பிராண்டு எஸ்யூவி ரக மாடலில் வெளியிடப்பட்ட காம்பஸ் எஸ்யூவி , இந்தியாவில் சிறப்பான வரவேற்பினை பெற்று வரும் நிலையில் 25,000 யூனிட்டுகள் விற்பனையானதை கொண்டாடும் வகையில் பல்வேறு கூடுதல் வசதிகளை பெற்ற டீசல் எஞ்சின் பெற்ற ஸ்போர்ட் 4×2 வேரியன்ட் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பெட்ராக் என்ற பெயரில் வெளியிடப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட உள்ள சிறப்பு பதிப்பில் தோற்றம் மற்றும் இன்டிரியர் என இரண்டிலும் பல்வேறு மாற்றங்கள் மற்ற மாடல்களில் இருந்து மாறுபட்ட தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

டீசல் எஞ்சின் கொண்டுள்ள சிறப்பு பெட்ராக் எடிஷனில் ஸ்போர்ட் வேரியன்ட்டை பின்பற்றி அதிகபட்சமாக 173 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகின்ற 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 350 என்எம் இழுவைத் திறன் வழங்குவதுடன் பவரை முன்சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வசதியை கொண்டதாக கிடைக்கின்றது.

பெட்ராக்கில் வெள்ளை, கிரே மற்றும் சிவப்பு என மொத்தம் மூன்று விதமான நிற மாறுபாட்டினை பெற்று விளங்குகின்றது. இந்த மாடலில் கருமை நிற பூச்சினை பெற்ற 16 அங்குல அலாய் வீல்,  கருப்பு நிற ரூஃப் ரெயில்கள், கருப்பு நிற மேற் கூரை ஆகியவற்றுடன் பெட்ராக் பாடி ஸ்டிக்கிரங் மற்றும் மோனோகிராம் பெற்று விளங்குகின்றது.

இன்டிரியரில் பெட்ராக் எடிசன் பேட்ஜ் பதிக்கப்பட்ட இருக்கை கவர்கள், 5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, மிதியடிகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. டைனமிக் கெயிடென்ஸ் வசதியுடன் கூடிய நேவிகேஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பாதுகாப்பு சார்ந்த வசதிகளாக இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வசதி, எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் போன்றவற்றை பெற்றுள்ளது.

ஜீப் காம்பஸ் பெட்ராக் எடிஷன் விலை ₹ 17.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

Exit mobile version