Automobile Tamilan

தமிழ்நாட்டில் வின்ஃபாஸ்ட் ஆட்டோ ரூ.16,000 கோடி முதலீடு – TNGIM 2024

vinfast auto vf8

இந்தியாவின் மின்சார பேட்டரி வாகனங்கள் சந்தையில் புதிய முதலீடாக தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.16,000 கோடி முதலீட்டை விய்டநாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோ மேற்கொள்ளுகின்றது.

உலகின் முன்னணி எலெக்ட்ரிக் பயணிகள் வாகன தயாரிப்பாளரான BYD, டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் வின்ஃபாஸ்ட் மிகவேகமாக கார், பேருந்து மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

Vinfast Auto

வின்ஃபாஸ்ட் ஆட்டோ மற்றும் தமிழ்நாடு அரசு இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி தமிழ்நாட்டின் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறுகையில், இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல் என குறிப்பிட்டுள்ளார்.

மின்சார வாகன உற்பத்தி சந்தையில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பிற்கு  ரூ.16,000 கோடி முதலீடு செய்து முதற்கட்டமாக ஆண்டுக்கு 150,000 வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைவதால் 3,000 முதல் 3,500 பேருக்கு  நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது.

முதற்கட்டத்தில் 500 மில்லியன் அமெரிக்க டாலரை அதாவது ரூ.4100 கோடியை நடப்பு 2024 ஆம் ஆண்டிலே ஆலை கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளது. ஒருங்கிணைந்த EV ஆலையில் வாகனங்கள் மற்றும் பேட்டரியும் தயாரிக்கப்பட உள்ளது.

வின்ஃபாஸ்ட் குளோபல் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துணை தலைமை நிர்வாக அதிகாரி திருமதி டிரான் மாய் ஹோவா பகிர்ந்து கொண்டார்: “இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வின்ஃபாஸ்டின் நிலையான வளர்ச்சி மற்றும் மாசு உமிழ்வு இல்லா எதிர்கால போக்குவரத்துக்கு வலுவான அர்ப்பணிப்பை நிரூபிக்கும். தமிழ்நாட்டில் முதலீடு செய்வது இரு தரப்பினருக்கும் கணிசமான பொருளாதார பலன்களைத் தருவது மட்டுமல்லாமல், இந்தியாவிலும் சிறப்பான பசுமை வாகனங்களுக்கான வளர்ச்சிக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் திரு. டிஆர்பி ராஜா கூறுகையில், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மாநிலத்தின் பசுமை வாகனங்களுக்கான பார்வைக்கு முக்கியமான பொருளாதார முன்னெடுப்பு மட்டுமல்ல,  வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஒருங்கிணைந்த EV வசதியை நிறுவுவதற்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்யத் தேர்வு செய்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

வின்ஃபாஸ்ட் நம்பகமான பொருளாதார பங்காளியாகவும், தமிழ்நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பாளராகவும் இருக்கும் என நான் நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

நாளை நடைபெற உள்ள 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. மேலும் தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வின்ஃபாஸ்ட் முக்கிய பங்காற்ற உள்ளது.

Exit mobile version