Automobile Tamilan

தமிழ்நாட்டில் வாகனங்களின் ஆன்-ரோடு விலை உயர்ந்தது

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் மூலம் புதிய மோட்டார் வாகனங்கள் மற்றும் பழைய வாகனங்களுக்கு சாலை வரி உயர்த்தப்பட்டுள்ளதால், பைக், கார், மற்றும் வர்த்தக வாகனங்களின் ஆன்-ரோடு விலை அதிகரித்துள்ளது.

சட்டபேரவையில் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு மோட்டார் வாகன வரி திருத்த மசோதா (Tamil Nadu Motor Vehicles Taxation Act Amendment Bill) மூலம் அனைத்து விதமான மோட்டார் வாகனங்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

Tamilnadu on-Road Price

நவம்பர் 9 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய சாலை வரி விதிப்பு முறைப்படி வாழ்நாள் வரி (Life Tax), இருசக்கர வாகனங்களில் ரூ.1,00,000 குறைந்த விலையில் உள்ள மாடல்களுக்கு 10 % வரியும், ரூ.1 லட்சத்துக்கும் கூடுதலான விலையில் உள்ள மோட்டார்சைக்கிள்களுக்கு 12 % ஆக வரி உயர்த்தப்பட்டுள்ளது.

முன்பாக, இந்த வரி அனைத்து வாகனங்களுக்கும் ஒரே மாதிரி 8 % ஆக இருந்து வந்தது.

பழைய பைக்குகளுக்கு, ஒருவருட பழையதெனில் ரூ.1 லட்சம் வரை விலைக்கு 8.25 %, அதற்கு மேல் 10.25 %, 2 ஆண்டு வரை பழையதாக இருந்தால் ரூ.1 லட்சத்துக்கு 8 %, அதற்கு மேல் 10 % என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 5 முதல் 10 லட்சம் வரையிலான கார்களுக்கு 18% வரியும், 20 லட்சம் அல்லது அதற்கு மேல் விலையுள்ள உயர் ரக கார்களை வாங்குபவர்கள் குறைந்தபட்சம் 4 லட்சம் வரியும் செலுத்த வேண்டும்.

வாடகைக்கு பயன்படுத்தப்படும் பயணிகள் போக்குவரத்து வாகனம், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி ஆனது ரூ.4,900-ஆக உயர்ந்துள்ளது. 35 பேருக்கு கூடுதலாக பயணிக்கும் வகையில் இருக்கை உள்ள வாகனங்களுக்கு இருக்கைக்கு ரூ.3 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் வரி உயர்கிறது. சென்னை, மதுரை, கோவை நகர சுற்றுப்பகுதிகளில் இயக்க அனுமதிக்கப்பட்ட பிரத்யேக பேருந்துகளுக்கு மேல்வரி விதிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து, வாடகை வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6,000 வரை பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரி உயா்த்தப்படுகிறது.

குறிப்பாக, குறைந்த திறன் கொண்ட இரு சக்கர வாகனம் வாங்குவோருக்கு ஜி.எஸ்.டி சேர்த்து ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். கார், கனரகவாகனங்கள், சுற்றுலா வாகனங்களின் திறன் மற்றும் விலைக்கு ஏற்ப வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மின்சார வாகனங்களுக்கு சாலை வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. இரு சக்கர வாகனங்களுக்கு விரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version