Site icon Automobile Tamilan

ஜிஎம் ஆலையை வாங்க ஒப்பந்தமா ? : எஸ்ஏஐசி மறுப்பு

சீனாவின் எஸ்ஏஐசி நிறுவனம் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஜிஎம் ஆலையை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக வெளிவந்த தகவலை எஸ்ஏஐசி நிறுவனம் மறுத்துள்ளது. ஆனால் இந்தியா வருகை குறித்து ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.

ஜிஎம் ஆலை

சமீபத்தில் வெளிவந்திருந்த எம்ஜி மோட்டார் இந்தியா வருகை மற்றும் செவர்லே ஆலையை வாங்க உள்ளதாக செய்திகளை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள SAIC நிறுவனம் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஜிஎம் செவர்லே ஆலையை வாங்குவதற்கான எவ்விதமான ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை என்ன திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் ஹலோல் ஆலையை மதிப்பீடு செய்து வருவதாக மட்டுமே சாங்காய் பங்குச் சந்தையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

1996 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த ஆலை முதன்முறையாக ஓபெல் பிராண்டு கார்கள் தயாரிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து  ஓபெல் பிராண்டுக்கு மாற்றாக செவர்லே 2006 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து செவர்லே கார்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றது.

செவர்லே நிறுவனத்தின் குஜராத் ஆலை வருகின்ற ஏப்ரல் 28 ,2017 முதல் மூடப்பட உள்ள நிலையில் செவர்லே நிறுவனத்தின் கார் உற்பத்தி முழுமையாக புனே அருகில் அமைந்துள்ள தாலேகான் ஆலைக்கு மாற்றப்பட்டுள்ளது. மூடப்பட உள்ள இந்த ஆலையை வாங்கவே எஸ்ஏஐசி திட்டமிட்டு வருகின்றது. செவர்லே நிறுவனத்தின் சீனாவின் கூட்டணி நிறுவனமாக செயல்படுகின்றது, இந்த நிறுவனத்தின் அங்கமே இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி நிறுவனமாகும். தற்பொழுது எம்ஜி மோட்டார் இந்தியா என்ற பெயரில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எம்ஜி மோட்டார் சார்பாக டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் எம்ஜி மோட்டார் இந்தியா அலுவலகத்தை திறந்துள்ளதாகவும் இதற்கு ஜிஎம் முன்னாள் நிர்வாக இயக்குநர் ராஜீவ் தலைவராக நியமிக்கப்பட்டு 8 உறுப்பினர்கள் கொண்ட  உயர்மட்டக் குழு ஒன்றை எஸ்ஏஐசி உருவாக்கியுள்ளது.

இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் வருகை குறித்தான முதற்கட்ட பணிகள் மற்றும் ஆலையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக எஸ்ஏஐசி (SAIC – Shanghai Automotive industry company) நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Exit mobile version