Automobile Tamil

தங்கம் விலை போல..! தினமும் மாறும் பெட்ரோல், டீசல் விலை

வருகின்ற மே 1ந் தேதி முதல் புதுச்சேரி உள்பட 5 முக்கிய நகரங்களில் தினந்தோறும் பெட்ரோலிய பொருட்கள் விலையை தினமும் மாற்றி அமைக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பெட்ரோலிய பொருட்கள்

இந்தியாவில் செயல்படுகின்ற மொத்த பெட்ரோல் நிலையங்களில் 95 சதவித பங்களிப்பை  பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெற்றுள்ளது. அதாவது நாட்டில் மொத்தமாக  56,190 பெட்ரோலிய டீலர்கள் செயல்படுவதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் கீழ் சுமார் 52,604 பங்க்குகள் செயல்படுகின்றது.

முதற்கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர்,  ஜெம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் என மொத்தம் 5 மாநிலங்களில் உள்ள 200 பங்க்குகளில் தினமும் மாறும் பெட்ரோலிய பொருட்களின் விலையை அறிமுகப்படுத்த உள்ளது.

மே 1ந் தேதி முதல் பெட்ரோலிய பொருட்கள் விலையை தினமும் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ள நிலையில், இந்த நகரங்களில் இந்த திட்டத்தை அமல்படுத்திய பிறகு ஏற்படும் சிக்கல்களை ஆய்வு செய்து, படிப்படியாக மற்ற முன்னணி நகரங்கள் மற்றும் நாடு முழுவதும் இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

சர்வதேச சந்தையில் நிலவுகின்ற கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படடையாக கொண்டு பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றம் செய்யும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தும்.  தற்போது பெட்ரோல், டீசல் விலை மாற்றம் 15 நாளுக்கு ஒரு முறை செய்யப்பட்டு வருகிறது.

இந்த முறை நடைமுறை வரும்பொழுது பெட்ரோல், டீசல் மற்றும் மற்ற பெட்ரோலிய பொருட்கள் விலையில் தினமும் சில பைசாக்கள் முதல் ரூபாய்கள் வரை குறையவும் அல்லது ஏறும். ஆனால் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்பட வாய்ப்பில்லை, என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பொதுத்துறை நிறுவனங்களின் இந்த முடிவினை தொடர்ந்து தனியார் நிறுவனங்களும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.

Exit mobile version