Site icon Automobile Tamilan

15 இருசக்கர மாடல்களை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்

2017 ஆம் நிதி ஆண்டில் 15 இருசக்கர மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சால் தெரிவித்துள்ளார். அனைத்து ஹீரோ பைக்குகளிலும் பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு எஞ்சினுக்கு மேம்படுத்தப்பட உள்ளது.

தொடக்கநிலை மற்றும் நடுநிலை சந்தைகளை குறிவைத்தே பெரும்பாலான மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக ஹீரோ தெரிவித்துள்ளது. சில பழைய மாடல்கள் மேம்படுத்தப்பட்டு கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் ஹீரோ ஐ3எஸ் நுட்பத்தினை பெற்று விளங்கும். வரவுள்ள 15 மாடல்களில் புதிய ஸ்கூட்டர்களும் அடக்கம்.

புதிய ஹீரோ பைக்குகள்

இந்த நிதி ஆண்டில் முதல் மாடலாக புதிய ஹீரோ அச்சிவர் 150 பைக் மாடல் செப்டம்பர் இறுதிக்குள் விற்பனைக்கு வரவுள்ளது. இதுதவிர i3S நுட்பத்துடன் கூடிய (i3S means idle-stop-start)  ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் மற்றும் பேஷன் ப்ரோ மாடல்களும் மற்ற இரு சக்கர வாகனங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. 15 மாடல்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் ஹீரோ டூயட் ஸ்கூட்டர்களை போல மேலும் சில ஸ்கூட்டர்களும் அறிமுகம் செய்ய உள்ளது. அனைத்து ஹீரோ மோட்டோகார்ப் பைக்கிலும் பிஎஸ்4 எஞ்சின் அடுத்த நான்கு மாதங்களுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த நிதி ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை நோக்கி பயணித்து வரும் ஹீரோ மோட்டோகார்ப் சர்வதேச அளவில் 33 நாடுகளில் செயல்பட்டு வருகின்றது. மேலும் பல புதிய சந்தைகளில் அறிமுகம் செய்யும் நோக்கில் 2017 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், குஜராத் உற்பத்தி ஆலை செயல்பாட்டிற்கு வந்துவிடும். கொலம்பியாவை தொடர்ந்து பங்களாதேஷ் நாட்டில் அமைக்கப்பட்டு வரும் ஹீரோ நிறுவனத்தின் இரண்டாவது சர்வதேச உற்பத்தி ஆலை  இந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் செயல்பாட்டிற்கு வந்துவிடும்.

லத்தின் அமெரிக்காவை தொடர்ந்து அர்ஜென்டினா , மெக்சிக்கோ நாடுகளில் விற்பனை பிரதிநிதிகளை நியிமிக்கப்பட்டுள்ளது. மேலும் நைஜீரீயாவிலும், ஹீரோ பைக் விற்பனை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக 56வது வருடாந்திர சியாம்  (SIAM – Society of Indian Automobile Manufacturers) கூட்டத்தில் பேசிய ஹீரோ மோட்டோகார்ப் சேர்மேன் பவன் முஞ்சால் தெரிவித்துள்ளார்.

ஹீரோ நிறுவனத்தின் பெர்ஃபாமென்ஸ் ரக மாடல்களான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் , ஹீரோ ஹெச்எக்ஸ்250 , ஹேஸ்டர் , இம்பல்ஸ் 250 மற்றும் XF3R போன்ற மாடல்கள் வருகை குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

Exit mobile version