351 கிமீ ரேஞ்சு.., உலகின் குறைந்த விலை எலக்ட்ரிக் கார் ஓரா ஆர்1 – ஆட்டோ எக்ஸ்போ 2020

சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஓரா எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரின் ஆர்1 (ORA R1) மின்சார காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கிரேட் வால் மோட்டார்ஸ் 2021 ஆம் ஆண்டில் தனது வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

கிரேட் வால் மோட்டார்ஸ் (ஜி.டபிள்யூ.எம்) சீனாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தியாளராகும். இந்நிறுவனத்தின் கீழ் ஹவால், வெய், ஓரா மற்றும் கிரேட் வால் பிக்கப் உள்ளிட்ட நான்கு பிராண்டுகளை கொண்டுள்ளது. தற்போது, இந்தியாவில் ஒரு உற்பத்தி ஆலையை அமைக்க பொருத்தமான் இடத்தை தேர்வு செய்து வருகின்றது. மகாராஷ்டிராவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸின் உற்பத்தி ஆலையை ஜி.டபிள்யூ.எம் கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ORA R1 எலக்ட்ரிக் கார்

ஓரா மின்சார வாகன பிராண்டில் ஆர்1, ஆர்2 மற்றும் ஐக்யூ என மூன்று கார்களை விற்பனை செய்து வரும் நிலையில், முதற்கட்டமாக ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் தனது மின்சார கார்களை காட்சிப்படுத்த உள்ளது. குறிப்பாக இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகின்ற ஓரா ஆர்1 எலக்ட்ரிக் காரில் 35 கிலோ வாட் மோட்டார் மற்றும் 34.7 லித்தியம் ஐயன் பேட்டரியை பெற்று அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தை எட்டும் திறனுடன், ஒரு முறை சிங்கிள் சார்ஜ் செய்தால் 351 கிமீ தொலைவு பயணிக்கும் திறனை பெற்றிருக்கும்.

மிக வேகமாக சார்ஜிங் செய்யும் முறையான டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 80 சதவீதம் சார்ஜை பெற 40 நிமிடங்களை எடுத்துக் கொள்ளும்.  இந்த காருக்கு இந்நிறுவனம் மூன்று ஆண்டுகள் அல்லது 1.20 லட்சம் கிலோமீட்டர் மற்றும் எட்டு ஆண்டுகள் அல்லது 1.50 லட்சம் கிலோமீட்டருக்கு இலவச சர்வீஸ் வழங்குகின்றது.

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் ஓரா ஆர்1 எலக்ட்ரிக் காரின் விலை ரூ. 8 லட்சம் விலையில் தொடங்கலாம். மேலதிக விபரங்கள், ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் வெளிவரவுள்ளது.

Share