Automobile Tamilan

2023 பஜாஜ் பல்சர் 125 பைக்கின் மாற்றங்கள் என்ன ?

குறைந்த விலையில் கிடைக்கின்ற பஜாஜ் பல்சர் 125 பைக்கின் 2023 மாடல் புதிய OBD-2 மேம்பாடு மட்டுமல்லாமல் சில குறிப்பிடதக்க மாற்றங்களை பெற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நடைமுறைக்கு வந்துள்ள BS6.2 மாசு உமிழ்வுக்கு ஏற்ற என்ஜினை பெற்றுள்ள பல்சர் 125 மாடலின் தோற்ற அமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும், குறிப்பிடதக்க மாற்றமாக புதிய அலாய் வீல், பாடி கிராபிக்ஸ் மற்றும் புதிய நிறங்களை பெற்றிருக்கும்.

2023 Bajaj Pulsar 125

விற்பனையில் கிடைக்கின்ற எலக்ட்ரானிக் கார்புரேட்டர் மாடலுக்கு மாற்றாக புதிதாக Fi அதாவது ஃப்யூவல் இன்ஜெக்டர் பெற்ற 124.4 cc சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் இப்பொழுது ஒற்றை ஸ்பார்க் பிளக் பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்றபடி, தொடர்ந்து 11.8hp குதிரைத்திறன் 8,500rpm மற்றும் டார்க் 10.8Nm ஆனது 6,500rpm-ல் வெளிப்படுத்தலாம். பல்சர் 125 பைக் மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

குறிப்பாக என்ஜினில் DTS-i பேட்ஜ் நீக்கப்பட்டு, பழைய 6-ஸ்போக் அலாய் வீலுக்கு மாற்றாக புதிய மூன்று ஸ்போக் உடன் கூடிய 6 ஸ்போக் பெற்ற அலாய் வீல் உள்ளது. 2023 பஜாஜ் பல்சர் 125 மாடலில் செமி-டிஜிட்டல் அனலாக் கன்சோல் கொடுக்கப்பட்டு நிகழ்நேரத்தில் எரிபொருள் இருப்பினை அறிய, இரண்டு ட்ரீப் மீட்டர் மற்றும் உமிழ்வு எச்சரிக்கை விளக்கு ஆகியவற்றை கொண்டுள்ளது. இது தவிர, ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், சைட் ஸ்டாண்ட் இண்டிகேட்டர் உள்ளிட்ட அம்சங்களை பெற்றுள்ளது.

விற்பனையில் கிடைக்கின்ற பல்சர் 125 பைக் தற்போதைய ரூ.84,026 (நியான் சிங்கிள் சீட்), ரூ.92,198 (கார்பன் ஃபைபர் சிங்கிள் சீட்) மற்றும் ரூ.94,586 (கார்பன் ஃபைபர் ஸ்பிளிட் சீட்) கிடைக்கின்றது. ஆனால் புதிய மாடல் விலை ரூ.3,000 முதல் ரூ.5000 வரை உயர்த்தப்படலாம். டீலர்களுக்கு புதிய பைக் விநியோகம் துவங்கியுள்ளதால் விலை விரைவில் அறிவிக்கப்படலாம்.

பஜாஜ் பல்சர் 125 மாடலுக்கு நேரடியான போட்டியை ஹீரோ கிளாமர் கேன்வாஸ், ஹோண்டா SP125 மற்றும் டிவிஎஸ் ரைடர் 125 ஆகியவற்றுடன் ஹோண்டா ஷைன் 125, ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் போன்றவை உள்ளது.

(எக்ஸ்ஷோரூம் சென்னை)

Image Source

Exit mobile version