Site icon Automobile Tamilan

நெஞ்சை அள்ளும் நெக்ஸான் எஸ்யூவி சிறப்பம்சங்கள்

டாடாவின் முந்தைய தவறுகளை முற்றிலும் நீக்கிய புத்தம் புதிய டிசைன் தாத்பரியங்கள் சிறப்பான எஞ்சின் தரம் என பலவும் உயர்த்தப்பட்ட டியாகோ, டீகோர் மாடல்களை தொடர்ந்து நெஞ்சை கொள்ளை கொள்ளும் டாடா நெக்ஸான் எஸ்யூவி வெளிவரவுள்ளது.

எஸ்யூவி

இந்திய சந்தையின் எஸ்யூவி விற்பனையில் மொத்த பங்களிப்பில் 39 சதவிகித அளவிற்கு சந்தை மதிப்பினை பெற்று விளங்கும் காம்பேக்ட் ரக எஸ்யூவிகளில் புதிய வரவாக மிக ஸ்டைலிஷான அம்சங்களை பெற்றதாக வரவுள்ள நெக்ஸான் போட்டியாளர்களுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பாக்ஸ் டைப் எஸ்யூவிகளை மட்டுமே இயக்கி வந்த இந்திய மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்திய டஸ்ட்டர், ஈக்கோஸ்போர்ட் ஆகியவற்றை தொடர்ந்து களமிறங்கிய பல்வேறு மாடல்கள் மிக சவாலான விலை மற்றும் சிறந்த தரம் போன்றவற்றால் மக்களை கவர்ந்துள்ளன. காம்பேக்ட் ரக எஸ்யூவி சந்தையில் ராஜாவாக திகழும் மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா மாடலுக்கு மிகுந்த நெருக்கடியை நெக்சன் ஏற்படுத்தும்.

மற்ற மாடல்களை விட வித்தியாசமான தோற்ற அமைப்பை வெளிப்படுத்தும் நோக்கில் கூபே ரக ஸ்போர்ட்டிவ் மாடல்களின் தோற்ற உந்துதலை அடிப்படையாக இம்பேக்ட் டிசைன் கொண்டு வடிவமைக்கப்பட்ட நெக்சான் பற்றி தொடர்ந்து காணலாம்.

டிசைன்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் எனும் டிசைன் மொழியை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ள புதிய நெக்ஸான் முகப்பில் மிக நேர்த்தியான டாடாவின் ஸ்மைல் கிரில் அமைப்பினை சற்று மாற்றியே வழங்கியிருந்தாலும், நேரத்தியாக கட்டமைக்கப்பட்ட ஹெட்லைட் உடன் இணைக்கப்பட்டிருக்கும், தேன்கூடு கிரில் அமைப்புடன் கீழ் வழங்கப்பட்டுள்ள பட்டை முகப்பு விளக்கு வரை முழுமையாக நீட்டிக்கப்பட்டு பம்பர் மேற்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

வட்ட வடிவ பனிவிளக்குகளை பெற்று விளங்குகின்ற முகப்பில் மிக அகலமான ஏர்டேம் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் ஸ்டைலிஷனான புரஃபைல் கோடுகள், ஸ்டைலிசான டைமன்ட் கட் அலாய் வீல் பெற்றுள்ளது.

பின்புற அமைப்பை பொறுத்த வரை பெரும்பாலான வாடிக்கையாளர்களை கவருமா ? என்ற சந்தேகம் எழுந்தாலும் மிக அகலமான க்ரோம் பட்டையின் மையத்தில் அமைந்துள்ள டாடா லோகோ மற்றும் இரு புறங்களிலும் X வடிவத்துக்கு இடையில் வழங்கப்பட்டுள்ள டெயில் விளக்குகள் மிக நேர்த்தியாக உள்ளது.

ஒட்டுமொத்த வடிவமைப்பில் காம்பேக்ட் ரக மாடல்களில் மிகவும் கவர்ச்சிகரமான எஸ்யூவி மாடல் கூபே ரக டிசைன் உந்துதலை பின்னணியாக கொண்டு அற்புதமாக டாடா தனது திறனை வெளிப்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல.

இன்டிரியர்

முந்தைய தலைமுறை மாடல்களை போல அல்லாமல் பல்வேறு கூடுதலான மேம்பாடுகளை பெற்று உட்புறத்தில் தரம் அதிகரிக்கப்பட்ட டேஸ்போர்டு, சொகுசான கார்களுக்கு இணையான வசதிகள் மற்றும் தாரளமான இடவசதி ஆகியவற்றை பெற்றதாக நெக்ஸான் விளங்குகின்றது.

உறுதியான கட்டமைப்பை வெளிப்படுத்தும் தோற்றத்துடன் இன்டிரியரில் மிக நேர்த்தியான டேஸ்போர்டில் மிதக்கும் வகையிலான 6. 5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடிய அமைப்பில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே போன்றவற்றுடன் கூடிய சென்ட்ரல் கன்சோல் அமைப்பில் மிக நேர்த்தியான டயல் போன் பொத்தான் அமைப்புகளுடன் மல்டி டிரைவ் மோடுகளை பெற்றுள்ளது.

போட்டியாளர்களை விட கூடுதலான பூட் இடவசதியை 350 லிட்டர் கொள்ளளவு கொண்ட நெக்ஸான் எஸ்யூவி மாடலில் பின்புற இருக்கைகள் மடக்கினால் 690 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக விரிவடைவதுடன், சிறப்பான அம்சத்தை பெற்றதாக வந்துள்ளது. 4மீட்டருக்கு குறைவான நீளத்தை பெற்றிருந்தாலும், தாராளமான ஹெட்ரூம் மற்றும் இடவசதியை பெற்றுள்ளது.

பவர் பஞ்ச்

டியாகோ மற்றும் டீகோர் போன்ற மாடல்களில் இடம்பெற்றிருந்த அதே ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்ற எஸ்யூவிக்கு ஏற்ற வகையில் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரெவோடார்க் வரிசையில் புத்தம் புதிதாக வரவுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எஞ்சினிலும்  6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். ஆட்டோமேட்டிக் மாடல் பற்றி எந்த விபரமும் வழங்கப்படவில்லை

இந்த பிரிவில் முதன்முறையாக மல்டி டிரைவ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோடின் வாயிலாக நெக்சன் எஸ்யூவி மாடலை ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என்ற மூன்று விதமான டிரைவிங் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக கன்சோல் கியர் லிவர் பகுதியில் டயல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மூன்று விதமான மோட்களில் நமக்கு தேவையானதை மாற்றிக் கொள்ளலாம்.

ஈக்கோ டிரைவிங் மோட் அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை பெற உதவும்.

சிட்டி டிரைவிங் மோட் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஓட்டுவதற்கு சிறப்பானதாக இருக்கும்.

ஸ்போர்ட் டிரைவிங் மோட் மூலமாக அதிக செயல்திறனை பெற வழிவகுக்கும் பயணத்தை தேற்கொள்ளலாம்.

இலகுவான ஸ்டீயரிங், உயர்தரமான கட்டுமானத்தை பெற்றதாக விளங்குகின்றது. நெக்ஸான் எஞ்சின் பவர்ஃபுல்லான பெர்ஃபாமென்ஸ் எஸ்யூவி மாடலாக விளங்குகின்றது.

பாதுகாப்பு அம்சங்கள்

பொதுவாக தற்போது விற்பனைக்கு வரவுள்ள அனைத்து கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களில் அடிப்படையான இரு காற்றுப்பைகள் , ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்றவை நிரந்தரமாக இணைக்கப்பட்டிருக்கும்.

போட்டியாளர்கள்

விட்டாரா பிரெஸ்ஸா, ஈக்கோஸ்போர்ட், டியூவி300 மற்றும் க்ரீட்டா, டஸ்ட்டர் போன்றவற்றுக்கும் ஈடுகொடுக்கும் வகையிலும் க்ராஸ்ஓவர் ரக WR-V போன்றவற்றுக்கு மிகுந்த சவாலாக நெக்ஸான் அமைந்திருக்கும்.

விலை

ரூ. 6.50 லட்சத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற டாடா நெக்ஸான் எஸ்யூவி அதிகபட்சமாக ரூ.10.99 லட்சத்தில் முடிவடையலாம்.

நெக்ஸான் வாங்கலாமா ?

முந்தைய டாடா மோட்டார்ஸ் அல்ல என்பதனை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய நிலைக்கு டியாகோ மற்றும் டீகோர் போன்றவை டாடாவின் தரத்தை நிரூப்பித்திருந்ததை போல புதிய நெக்ஸான் உறுதியாக சிறந்த எஸ்யூவி மாடலாக விளங்கும்.

விட்டாரா பிரெஸ்ஸா, ஈக்கோஸ்போர்ட் போன்வற்றுக்கு நிச்சியமாக மாற்றாக டாடா நெக்ஸான் அமைந்திருக்கும் என்பதில் எந்த மாற்றமுமில்லை.

Tata Nexon SUV Image Gallery

 

Exit mobile version