தமிழகத்தில் தயாராகும் சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் எஸ்யூவி விபரம்

இந்திய மோட்டார் சந்தையில் மீண்டும் கால்பதிக்கும் சிட்ரோயன் பிராண்டில் முதல் எஸ்யூவி மாடல் சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் கார் மாடல் திருவள்ளுவர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. 95 சதவிகிதம் உதிரிபாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதனால் மிகவும் சவாலான விலையில் நவீன டெக் அம்சங்களை உள்ளடக்கிய கார் மாடலாக சி5 ஏர்க்ராஸ் விளங்க உள்ளது.

இந்திய சந்தையில் சிட்ரோயன் நிறுவனம், பெட்ரோல் , டீசல் என்ஜின் உட்பட எலக்ட்ரிக் கார் மாடல்களையும் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பிஎஸ்ஏ குழுமத்தின் கீழ் செயல்படும், இந்நிறுவனம் பிரபலமான அம்பாசிடர் காரினை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. ஐரோப்பாவில் விற்பனை செய்யபடுகின்ற மிக சிறந்த வடிவமைப்பினை பெற்ற சி5 ஏர்கிராஸ் மாடல் பற்றி மேலதிக விபரங்களை தொடர்ந்து காணலாம்.

ஐரோப்பா சந்தையில் இந்த எஸ்யூவியில் ஒரு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் கிடைத்து வருகின்றது. ஆனால் இந்திய சந்தையில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 130 எச்பி பவர் வெளிப்படுத்தும். 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். 4.5 மீட்டர் கொண்டிருக்கும் சி5 ஏர்கிராஸ் காரானது இந்திய சந்தைக்கு ஏற்றவாறு பல்வேறு மாறுதல்களை பெற்றிருக்கும்.