Automobile Tamilan

XUV 3XO எஸ்யூவிக்கு முன்பதிவை துவங்கிய மஹிந்திரா

xuv 3xo front view

மே 15 ஆம் தேதி இன்றைக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள மஹிந்திராவின் புதிய XUV 3XO எஸ்யூவி மாடலின் ஆரம்ப விலை ரூ.7.49 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடும் போட்டியாளர்கள் நிறைந்த 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள எஸ்யூவி சந்தையில் முந்தைய XUV300க்கு மாற்றாக வந்துள்ள XUV3XO மாடலுக்கு சவால் விடுக்கும் வகையில் டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், ரெனோ கிகர், நிசான் மேக்னைட் உட்பட மாருதி ஃபிரான்க்ஸ், டொயோட்டா டைசோர் போன்ற மாடல்கள் கிடைக்கின்றன.

மிகவும் சக்திவாய்ந்த டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் அதிகபட்ச டார்க் வழங்கும் டீசல் என்ஜின் பெறுவதுடன், பல்வேறு கனெக்ட்டிவ் சார்ந்த வசதிகளுடன் லெவல் 2 ADAS பெறுகின்ற மாடலாகவும் இந்த பிரிவில் கிடைக்கின்றது.

எக்ஸ்யூவி 3XO காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இரு விதமான பவரை வழங்குகின்றது. ஒன்று 111 hp, 200NM மற்றும் 131 hp, 230 NM பெற்றுள்ளது. பொதுவாக 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் பெற்றுள்ளது.

1.5 லிட்டர் டீசல் என்ஜின் 117 hp பவர் மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது.

MX1, MX2, MX2 PRO, MX3, MX3 PRO, AX5, AX5 L, AX7 மற்றும் AX7 L என 9 பிரிவுகளில் மொத்தமாக 18 விதமான வகைகளில் கிடைக்கின்ற நிலையில் 8 விதமான நிறங்களை கொண்டுள்ளது. 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட அடிப்படையான வசதிகளுடன் கேமரா மற்றும் ரேடார் அடிப்படையிலான இரண்டாம் கட்ட ADAS நுட்பத்தை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மஹிந்திரா XUV 3XO ஆன்ரோடு விலை ரூ.9.01 லட்சம் முதல் துவங்கி டீசல் என்ஜின் பெற்ற மாடல் ரூ.18.75 லட்சம் வரை விற்பனைக்கு கிடைக்கின்றது.

மஹிந்திரா XUV 3X0 புகைப்படங்கள்

Exit mobile version