2020 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த கார்கள் மற்றும் எஸ்யூவிகள்

2020 ஆம் ஆண்டின் இறுதி நாளில் உள்ள நாம் கடந்த 366 நாட்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த கார்களில் மிக முக்கியமான மாடல்களின் தொகுப்பினை பற்றி அறிந்து கொள்ளலாம்.

1. மஹிந்திரா தார்

மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யூவி இந்திய சந்தையில் மிக சிறப்பான ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற பட்ஜெட் விலை மாடலாக விளங்குகின்றது. தார் எஸ்யூவியின் முதல் #1 சேஸ் எண் கொண்ட கார் 1.11 கோடிக்கும் கூடுதலான தொகையில் ஏலத்தில் எடுக்கப்பட்டது. இந்த தொகை கோவிட்-19 பங்களிப்பிற்க்கு வழங்கப்பட்டது.

இந்த எஸ்யூவி காரின் உற்பத்தி எண்ணிக்கை 2500 யூனிட்டுகளாக மட்டுமே உள்ள நிலையில் அபரிதமான புக்கிங் காரணமாக 10 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது.

2.0 லிட்டர் Mstallion பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 150 ஹெச்பி பவர் மற்றும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பெறும் தார் காரில் அதிகபட்சமாக 130 ஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

மஹிந்திரா தார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஆப்ஷனிலும் விலை ரூ.11.90 லட்சம் முதல் ரூ.13.75 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

2. கியா சொனெட்

இந்தியாவில் கியா வெளியிட்ட மூன்றாவது மாடலான சொனெட் மிகப்பெரிய வெற்றியை பெற்று 10,000-க்கு கூடுதலான எண்ணிக்கையை மாதந்தோறும் பதிவு செய்து வருகின்றது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல் உட்பட 1.5 லிட்டர் டீசல் என மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷனுடன் ஐஎம்டி, மேனுவல், டிசிடி மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற பல்வேறு எஸ்யூவி கார்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தியுள்ள மாடலுக்கு 50,000 கூடுதலான புக்கிங் பெற்றுள்ளது.

கியா சொனெட் விலை ரூ.6.71 லட்சம் முதல் துவங்கி அதிகபட்சமாக ரூ.12.99 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை விற்பனை செய்யப்படுகின்றது.

3. நிசான் மேக்னைட்

நிசான் இந்தியா நிறுவனத்திற்கு புதிய அத்தியாயத்தை துவங்கி வைத்துள்ள மேக்னைட் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 100 ஹெச்பி பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு விதமான இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் சிவிடி ஆப்ஷனை பெறுகின்றது.

விற்பனைக்கு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் அமோக ஆதரவினை பெற்று 8-9 மாதங்கள் வரை டெலிவரி பெற காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தற்போதைக்கு அறிமுக சலுகையாக ரூ.50,000 வரை வேரியண்ட் வாரியாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

நிசான் மேக்னைட் விலை ரூ.5.54 லட்சம் முதல் துவங்கி அதிகபட்சமாக ரூ.10.09 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை விற்பனை செய்யப்படுகின்றது.

4. ஹூண்டாய் கிரெட்டா

இரண்டாம் தலைமுறை கிரெட்டா எஸ்யூவி காரின் விற்பனை மிக சிறப்பாக தொடர்ந்து அமைந்திருக்கின்றது. கடுமையான போட்டியாளர்கள் உள்ள நிலையிலும் சிறப்பான வரவேற்புடன் 138 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பெற்று ஐஎம்டி, மேனுவல், டிசிடி மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

மாதந்தோறும் 9,000 கூடுதலான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுகின்ற கிரெட்டா விலை ரூ.9.82 லட்சம் முதல் ரூ.17.32 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம்) கிடைக்கின்றது.

5. எம்ஜி குளோஸ்டெர்

இந்தியாவின் பிரீமியம் எஸ்யூவி சந்தையில் களமிறங்கியுள்ள எம்ஜி குளோஸ்டெர் இதுவரை இந்தியாவில் கிடைக்காத Level-1 தன்னாட்சி நுட்பத்துடன் பல்வேறு நவீனத்துவமான டெக்னாலாஜி மற்றும் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக விளங்குகின்றது.

ஃபோர்டு எண்டேவர், ஃபார்ச்சூனர் , அல்டூராஸ் ஜி4 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்ற குளோஸ்டர் காரில் 163 ஹெச்பி பவர் மற்றும் 375 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 218 ஹெச்பி பவர் மற்றும் 480 என்எம் டார்க் வெளிப்படுத்துகிற 2.0 லிட்டர் ட்வீன் டர்போ டீசல் என இரு ஆப்ஷனை கொண்டுள்ளது.

எம்ஜி குளோஸ்டெர் விலை ரூ.29.98 லட்சம் முதல் ரூ.35.58 லட்சத்தில் கிடைக்கின்றது.

6. ஹோண்டா சிட்டி

ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் வெளியிடப்பட்டு பல்வேறு பிரீமியம் வசதிகளை கொண்டதாகவும், நாட்டின் முதல் அலெக்ஸா ஆதரவை கொண்ட காராக வெளியானது. 119 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 98 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வெளிப்படுத்துகின்றது.

ஹோண்டா சிட்டி விலை ரூ.10.90 லட்சம் முதல் ரூ.14.65 லட்சம் ஆகும்.

7. ஹூண்டாய் ஐ20

மூன்று இன்ஜின் ஆப்ஷன் பெற்ற புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரில் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு ப்ளூலிங்க் கனெக்ட்டிவிட்டி ஆதரவுடன் விளங்குகின்றது.

1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 83 ஹெச்பி பவரும்,  120 HP பவர் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் 100 பிஹெச்பி பவர் வழங்கும் 1.5-லிட்டர் VGT டீசல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது.

ஹூண்டாய் ஐ20 காரின் ஆரம்ப விலை ரூ.6.80 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.11.18 லட்சம் வரை விற்பனைக்கு கிடைக்கின்றது.

8. டொயோட்டா அர்பன் க்ரூஸர்

முன்பாக இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா காரின் அடிப்படையிலான டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் பெற்றுள்ளது.

1.5 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 103 ஹெச்பி பவர், 138 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் SHVS ஹைபிரிட் நுட்பத்துடன் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்டுள்ளது.

இந்த கார்களை தவிர மேம்படுத்தப்பட்ட மாடல்களும் 2020 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Share