அடுத்தடுத்து.., 3 எஸ்யூவி கார்களை வெளியிட உள்ள மாருதி சுசூகி

நாட்டின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம் அடுத்த சில மாதங்களில் ஃபிரான்க்ஸ் (Fronx) , ஜிம்னி மற்றும் பிரெஸ்ஸா சிஎன்ஜி என மூன்று மாடல்களை வெளியிடுவது உறுதியாகியுள்ளது.

2023 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட ஃபிரான்க்ஸ் மற்றும் ஜிம்னி என இரண்டு கார்களுக்கும் முன்பதிவு நடைபெற்று வருகின்றது. பலினோ காரின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள கிராஸ்ஓவர் எஸ்யூவி ரக Fronx மாடலில் இரு விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனை பெற உள்ளது. மிக முக்கியமான ஜிம்னி எஸ்யூவி நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு ஜிப்ஸி காரின் புதிய மாடலாக வெளிவரவுள்ளது. இந்த மாடலுக்கும் முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

மாருதி சுசூகி Fronx

விற்பனையில் கிடைத்து வருகின்ற பலினோ காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய Fronx (Frontier Next) கார் HEARTECT பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் பலினோ காரை விட நீளம் 5 மிமீ மற்றும் அகலம் 20 மிமீ மட்டும் அதிகரிக்கப்பட்டு, வீல்பேஸ் மற்றும் உயரம் என இரண்டும் எந்த மாற்றமும் இல்லை.

குறிப்பாக ஸ்டைலிங் சார்ந்த அம்சத்தில் கிராண்ட் விட்டாரா காரிலிருந்து பெறப்பட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ள ஃபிரான்க்ஸ் காரில் இடம்பெற்றுள்ள என்ஜின் ஆப்ஷன் 1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 hp பவர் மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பொறுத்தவரை 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற உள்ளது.

சற்று கூடுதலான பவரை வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் (மைல்டு ஹைபிரிட்) 100 PS மற்றும் 148 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் ஐந்து வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெறும்.

அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு கிடைக்க உள்ள மாருதி Fronx காரின் போட்டியாளர்கள் சிட்ரோன் C3, டாடா பஞ்ச், நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகும்.

மாருதி சுசூகி ஜிம்னி

ஜிப்ஸி காருக்கு மாற்றான ஜிம்னி மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற ஆஃப் ரோடு அம்சங்களை பெற்ற எஸ்யூவி கார் அடுத்த மாத மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். ஆஃப்-ரோடு சாகசத்திற்கு ஏற்ற வரவிருக்கும் ஐந்து கதவுகள் கொண்ட மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்கா உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ள ஜிம்னி காரில் 105 Hp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஐந்து வேக ஆட்டோமேட்டிக்  கியர்பாக்ஸ் உடன் டாப் வேரியண்டுகளில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற உள்ளது. மற்றபடி ‘2WD-high’, ‘4WD-high’ மற்றும் ‘4WD-low ஆகிய வசதிகளை பெற்றுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பே 18,000 க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றிருந்த மாருதி ஜிம்னியின் விலை ரூ. 12 லட்சம் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் விற்பனைக்கு மே 2023 கிடைக்கலாம்.

மாருதி சுசூகி பிரெஸ்ஸா சிஎன்ஜி

அமோகமான வரவேற்பினை பெற்று விளங்கும் மாருதி சுசூகி பிரெஸ்ஸா எஸ்யூவி காரில் சிஎன்ஜி அறிமுகப்படுத்தப்பட்டால் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற நாட்டின் முதல் CNG வாகனமாக விளங்கும். பிரெஸ்ஸா சிஎன்ஜி 1.5 லிட்டர் K15C டூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின் 100 hp மற்றும் 136Nm அதே என்ஜின் CNG முறையில் 88hp மற்றும் 121.5Nm டார்க் வெளிப்படுத்தும், ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டிலும் கிடைக்க உள்ளது. இந்த என்ஜின் முன்பாக விற்பனையில் உள்ள எர்டிகா மற்றும் XL6 கார்களில் இடம்பெற்றுள்ளது.

அடுத்த சில வாரங்களில் சிஎன்ஜி என்ஜின் பெற்ற விட்டாரா பிரெஸ்ஸா விற்பனைக்கு கிடைக்கும்.

Exit mobile version