Automobile Tamilan

இரண்டு எஸ்யூவிகளை வெளியிட தயாராகும் எம்ஜி மோட்டார்

எம்ஜி மோட்டார்

வரும் மார்ச்  20 ஆம் தேதி எம்ஜி மற்றும் ஜேஎஸ்டபிள்யூ கூட்டணியில் உருவாக உள்ள மாடல்கள் மற்றும் எதிர்கால தயாரிப்பு திட்டங்கள் பற்றி முக்கிய தகவல்கள் வெளியிடப்பட உள்ள நிலையில் நடப்பு 2024ல் எம்ஜி நிறுவனம் புதிய குளோஸ்டெர் மற்றும் Excelor EV என இரண்டு மாடல்களை வெளியிட திட்டமிட்டிருக்கின்றது.

2024 MG Gloster

பிரீமியம் சந்தையில் உள்ள மேம்படுத்தப்பட்ட குளோஸ்டெர் எஸ்யூவி மாடலின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகின்ற நிலையில் பெரிய அளவிலான டிசைன் மாற்றங்களுடன் பல்வேறு டெக்னிக்கல் சார்ந்த டிஜிட்டல் மேம்பாடுகளை பெற்றதாக வரக்கூடும்.

எஞ்சின் விருப்பத்தில் எந்த மாற்றமும் இருக்காது. தொடர்ந்து  2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருதப்பட்டு 163 ஹெச்பி பவர் மற்றும் 375 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

மிகவும் சக்திவாய்ந்த ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் பெற்ற வேரியண்ட் 218 ஹெச்பி பவர் மற்றும் 480 என்எம் டார்க் வெளிப்படுத்துகிற 2.0 லிட்டர் ட்வீன் டர்போ டீசல் இன்ஜின் உள்ளது. இதிலும் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

தற்பொழுது குளோஸ்டெரின் விலை ரூ. 37.50 லட்சத்தில் துவங்குகின்ற நிலையில் இந்த மாடலுக்கு போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர், ஜீம் மெரிடியன், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மற்றும் ஸ்கோடா கோடியாக் உள்ளது.

MG Excelor EV

சில வாரங்களுக்கு முன்பாக கொமெட் இவி, ZS EV கார்களின் விலை குறைத்த நிலையில் மூன்றாவது எலக்ட்ரிக் மாடலுக்கான பெயர் எக்ஸெலார் இவி என வர்த்த முத்திரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.10-12 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற Excelor EV பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் எம்ஜி வெளியிடவில்லை என்றாலும், சில தகவல்களின் அடிப்படையில் தற்பொழுது விற்பனையில் உள்ள எம்ஜியின் இரு எலக்ட்ரிக் கார்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட உள்ள எக்ஸெலார் இவி ஆனது சீன சந்தையில் கிடைக்கின்ற யப் எஸ்யூவி போல அமைந்திருக்கலாம்.

101hp பவரை வெளிப்படுத்துகின்ற மாடலில் 28.1kWh LFP பேட்டரி பேக் பொருத்தப்பட்டிருக்கும். இந்த காரின் முழுமையான சிங்கிள் சார்ஜ் மூலம் 401 கிமீ ரேஞ்ச் வழங்கும் என CLTC சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் வேகம் மணிக்கு அதிகபட்சமாக 150 கிமீ ஆக உள்ளது.

வரும் பண்டிகை காலத்துக்கு முன்பாக இரண்டு கார்களையும் எம்ஜி மோட்டார் விற்பனைக்கு கொண்டு வரலாம் என நம்புகிறோம். கூடுதலாக எதிர்கால திட்டங்களை பற்றி ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி குறித்த தகவலை மார்ச் 20 ஆம் தேதி அறிந்து கொள்ளலாம்.

Exit mobile version