
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன விடா கீழ் உருவாக்கப்பட்டுள்ள DIRT.E பிராண்டின் முதல் மாடலாக வந்துள்ள K3 எலக்ட்ரிக் பைக் 4 முதல் 10 வயது குழந்தைகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அறிமுகம் சலுகை விலை ரூ. 69,990 (முதல் 300 வாடிக்கையாளர்களுக்கு மட்டும்). வரும் ஜனவரி 15, 2026 முதல் விற்பனை துவங்க உள்ள நிலையில், முதற்கட்டமாக டெல்லி, பெங்களூரு, புனே, ஜெய்ப்பூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய ஐந்து நகரங்களில் மட்டுமே இது கிடைக்கும். இந்த சாகச மாடலை வாங்க ஆர்வமுள்ளவர்கள் ‘விடா’ இணையதளத்தில் இன்றே பதிவு செய்துக் கொள்ளலாம்.
Vida Dirt.E K3
முதன்முறையாக EICMA 2025ல் உற்பத்தி நிலை மாடல் காட்சிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து விலை அறிவிக்கப்பட்டு டெலிவரி ஜனவரி முதல் துவங்க உள்ளதால் பலரும் மிகுந்த ஆர்வமாக வாங்க உள்ளார்கள்.!
4 முதல் 10 வயது வரையிலான சிறுவர், சிறுமியர்களுக்கான இந்த அட்வென்ச்சர் பைக், அவர்களின் சாகச பயணங்களுக்கு ஒரு சிறந்த தொடக்கமாக அமையும். பொதுவாகக் குழந்தைகளுக்கு வாங்கும் சைக்கிள் அல்லது வாகனங்கள், அவர்கள் வளரும்போது சிறியதாகிவிடும். ஆனால், இந்த DIRT.E K3 பைக்கின் மிகச்சிறந்த அம்சமே அதன் தனித்துவமான அமைப்பின் மூலம், குழந்தையின் உயரத்திற்கு ஏற்ப பைக்கின் அளவை மூன்று நிலைகளில் (Small, Medium, மற்றும் Large) மாற்றியமைக்க முடியும்.
ஒவ்வொன்றும் சஸ்பென்ஷன் நீளம் மற்றும் பிரேம் உயரத்தை மாற்றுகிறது. Small அமைப்பில் இருக்கை உயரம் 454 மிமீ வரை வரையறுக்கப்பட்டுள்ளது, Medium அடிப்படையில் 544 மிமீ வரை செல்கிறது மற்றும் Large முறையில் 631 மிமீ வரை நீட்டிக்கும், பிரேக்கிங் 160 மிமீ பின்புற டிஸ்க் மூலம் மட்டும் கையாளப்படுகிறது.
இதற்கு ஒரே ஒரு கருவி மட்டுமே போதுமானது. இதனால், குழந்தை வளர வளர பைக்கையும் அதற்கேற்ப மாற்றிக்கொண்டு நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தலாம். அதே போல மிக எளிமையாக மாற்றிக் கொள்ளலாம்.
இந்த டர்ட்.இ கே3 பைக் பிரத்யேகமாக மொபைல் செயலி மூலம் பெற்றோர்கள் இந்த பைக்கின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம். ஆரம்ப நிலையில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் பயணிக்கலாம் என நிர்ணயிக்கும் வகையிலான Beginner மோடு, Amateur மோடில் மணிக்கு 16 கிமீ மற்றும் Pro மோடில் மணிக்கு 25 கிமீ வேகத்தில் இயக்கலாம்.
ஒருவேளை குழந்தை பைக்கிலிருந்து தவறி விழுந்தால், இதில் உள்ள காந்த விசை இணைப்பு துண்டிக்கப்பட்டு, பைக் உடனடியாக ஆஃப் ஆகிவிடும்.
சிவப்பு, ஊதா மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கின்ற இதில் 360Wh திறன் கொண்ட கழற்றி மாற்றக்கூடிய பேட்டரி கொடுக்கப்பட்டு முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 3 மணிநேரம் ஆகும். ஒருமுறை சார்ஜ் செய்தால், பயன்படுத்தும் முறைக்கு ஏற்ப 3 மணிநேரம் வரை பயணிக்கவும், பேட்டரியை வீட்டிற்குள் எடுத்துச் சென்று எளிதாக சார்ஜ் செய்துகொள்ளும் வசதி இதில் உள்ளது.
ஜெர்மனி மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள ஹீரோவின் ஆராய்ச்சி மையங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த அட்வென்ச்சர் பைக், சர்வதேச அளவில் அங்கீகாரம், 2025-ம் ஆண்டிற்கான Red Dot Design Award மற்றும் 2026-ம் ஆண்டிற்கான சிஇஎஸ் (CES) விருதுகளையும் இது வென்றுள்ளது. ஆந்திரப் பிரதேச உள்ள திருப்பதி தொழிற்சாலையில் இது தயாரிக்கப்படுகிறது.