Automobile Tamil

தென் கொரியாவையே அலறவைத்த தமிழக தெர்மோகோல் அரசியல் சிங்கங்கள் – கியா

தமிழக அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்டதன்  விளைவாகவே தென் கொரியவைச் சேர்ந்த கியா நிறுவனம், ரூ.7050 கோடி முதலீட்டிலான ஆலையை ஆந்திர மாநிலத்துக்கு மாற்றியுள்ளதாக தகவல் பேஸ்புக்கில் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியல் சூழ்நிலை மற்றும் கியா கார் நிறுவனம், தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்காததுகுறித்து தொழிலதிபர் கண்ணன் ராமசாமி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘இந்தப் பதிவை மிகவும் மன வருத்தத்துடன் பதிவிடுகிறேன். தென்கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸின் துணை நிறுவனமான ஹூண்டாய், தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்க விரும்பியது. கியா நிறுவனத்துக்கு நாங்கள் ஆலோசகராக இருந்தோம். தமிழகம் முதல் சாய்ஸாகவும், அதன் பிறகு குஜராத், ஆந்திராவின் ஶ்ரீ சிட்டி ஆகிய இடங்களை பரிந்துரைத்தோம்.

தமிழகத்தில் ஒரகடம் சிப்காட்டில் தேவையான நிலம் இருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசியல்வாதிகள், நிலத்தின் மதிப்பைவிட 50 சதவிகிதத்துக்கு மேல் லஞ்சமாகக் கேட்டனர். மேலும், கியா நிறுவனம் வரி விலக்கு, மின் கட்டணத் தள்ளுபடி, சாலை வசதி உள்ளிட்டவற்றைக் கேட்டார்கள். அதற்கும், அரசியல்வாதிகள் தனியாக லஞ்சம் கேட்டனர். இதனால் கியா நிறுவனம், ஆந்திரப்பிரதேசத்தைத் தேர்வுசெய்தது. ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, கியா நிறுவனத்துக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தார். கியா நிறுவனத்தை தமிழ்நாட்டுக்குக் கொண்டுவருவதற்கு நாங்கள் இரண்டு ஆண்டுகளாக உழைத்தோம். ஆனால் எல்லாம் வீணானது. தமிழ்நாட்டில் இதேநிலை தொடருமானால், நம் மாநிலம் கடைசி இடத்தைப் பிடிக்கும். எனக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியில் விருப்பம் இல்லை.

ஆனால், தற்போதைய சூழலில் சில காலம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தி, தமிழகத்தை சீரமைக்கவேண்டிய அவசியம் உள்ளது. தமிழ்நாடு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை மட்டும் இழக்கவில்லை. ஏராளமான இளைஞர்களின் வேலை வாய்ப்புகளையும் இழந்துள்ளது. நான் தலைகுனிந்து நிற்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். அவருடைய இந்தப் பதிவு, தமிழக அரசியல்வாதிகளுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

நமது தளத்தில் முன்பே பதிவிட்டிருந்தோம் கியா இறுதியாக மூன்று இடங்களை தேர்வு செய்திருந்த நேரத்தில் தமிழகம் இல்லை என்பதற்கு அரசியில் காரணமா என்று தற்பொழுது அது உறுதியாகியுள்ளது.

நன்றி ; விகடன்  பேஸ்புக் – fb.com/KannanInfratech

 

Exit mobile version