சென்னையில் கிளாஸிக், வின்டேஜ் கார்களின் அணிவகுப்பு

மெட்ராஸ் ஹெரிட்டேஜ் மோட்டாரிங் கிளப் நடத்தும் வின்டேஜ் கார், கிளாஸிக் கார்களின் அணிவகுப்பு, இன்று சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வன்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உபயோகித்த டாஜ் கிங்ஸ்வே கார் (1957), தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான எஸ்.எஸ்.வாசன், ஏவி.எம் ஆகியோரின் கார்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த மெட்ராஸ் ஹெரிட்டேஜ் மோட்டாரிங் கிளப்பின் தலைவர் பால்ராஜ் வாசுதேவன் பேசுகையில், “புராதன கார்களை மறுசீரமைத்துப் பேணி வருவதில் இந்தக் கார்களின் உரிமையாளர்கள் பேரார்வத்துடன் நிறைய சிரமத்தை மேற்கொள்கிறார்கள். அதைப் பாராட்டும் விதமாகவும் ஊக்கப்படுத்தும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி, கடந்த 15 வருடங்களாக நடத்தப்பட்டுவருகிறது. பொதுமக்கள் பார்வைக்கு எங்கள் கிளப்பின் 125 உறுப்பினர்களின் 150-க்கும் அதிகமான கார்கள் மற்றும் பைக்குகள் பார்வைக்கு வைக்கப்படும். முன்னர் மாதிரி சாலைகள் நெரிசல் இன்றி இல்லாததால், கார் ஊர்வலம் மக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று போக்குவரத்துக் காவல்துறையின் ஆலோசனைப்படி இந்த கார்கள் பார்வைக்கு மட்டும்தான்.” என்றார்.

இந்த கார்கள் அணிவகுப்பு, இன்று காலை 9 மணி முதல் சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வன்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது. சிறப்பாகப் பராமரிக்கப்பட்டுள்ள கார்களுக்கு பரிசுத்தொகை கொடுக்கப்படும். நடிகர் சத்யராஜ், அன்றைய தினம் இந்நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்கிறார்.