Automobile Tamilan

50 கோடி இரு சக்கர வாகனங்களை தயாரித்த ஹோண்டா

ஹோண்டா முதல் பைக் ட்ரீம் D-டைப்

1949 ஆம் ஆண்டு உற்பத்தியை துவங்கிய ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்த 76 ஆண்டுகளில் ஒட்டுமொத்த உற்பத்தி 50 கோடி அல்லது 500 மில்லியன் இரு சக்கர வாகனங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. 50 கோடி மாடலாக ஹோண்டா ஆக்டிவா இந்தியாவில் உள்ள விட்டலாபூர், அகமதாபாத் ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

1948 ஆம் ஆண்டு ஹோண்டா மோட்டார் நிறுவனம் என துவங்கப்பட்டு, 1949 ஆம் ஆண்டு முதன்முறையாக Dream D-Type என்ற பைக் மூலம் உற்பத்தி துவங்கிய கடந்த 76 ஆண்டுகளில் பல்வேறு கட்ட வளர்ச்சி அடைந்துள்ளது.

1963 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் உள்ள  முதல் வெளிநாட்டு உற்பத்தி நிலையத்தில் ஹோண்டா மோட்டார் சைக்கிள்களின் பெருமளவிலான உற்பத்தியைத் தொடங்கியது, அதன் பின்னர், “தேவை உள்ள இடங்களில் உள்ளூரில் உற்பத்தி செய்தல்” என்ற அதன் அடிப்படைக் கொள்கையின்படி உலகளவில் அதன் உற்பத்தியை விரிவுபடுத்தியுள்ளது.

இதன் விளைவாக, ஹோண்டா 1997ல் 10 கோடி யூனிட் மைல்கல்லையும், 2008ல் 20 கோடி யூனிட் மைல்கல்லையும், 2014-ல் 30 கோடி யூனிட் மைல்கல்லையும் எட்டியது. 2018 ஆம் ஆண்டில், ஹோண்டாவின் ஆண்டு உற்பத்தி அதன் வரலாற்றில் முதல் முறையாக 20 மில்லியன் யூனிட்களைத் தாண்டியது, மேலும் ஒட்டுமொத்த உலகளாவிய உற்பத்தி 2019-ல் 400 மில்லியன் யூனிட்களை எட்டியது.

1985 ஆம் ஆண்டு இந்தியாவில் ஹோண்டா மற்றும் ஹீரோ கூட்டணியில் மோட்டார்சைக்கிள் உற்பத்தி துவங்கப்பட்ட நிலையில், 2011 ஆம் ஆண்டு இரு நிறுவனங்களும் பிரிந்தது. இந்தியாவின் இரண்டாவது பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளராக உள்ள ஹோண்டா 4 ஆலைகளை பெற்று 62 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்து வரும் நிலையில், விட்டலாப்பூர் ஆலையில் 4வது உற்பத்தி பிரிவை சுமார் 920 கோடி முதலீட்டில் விரிவுப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ஹோண்டா 23 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சுமார் 37 உற்பத்தி ஆலைகள் மூலம் ஆண்டுக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான யூனிட் உற்பத்தி திறன் கொண்டது. இந்நிறுவனம் 30,000 க்கும் மேற்பட்ட ஹோண்டா டீலர்களின் நெட்வொர்க் மூலம் உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.

Exit mobile version