இந்தியாவில் வெற்றிகரமாக 40வது ஆண்டினை கொண்டாடும் யமஹா மோட்டார் நிறுவனம் தனது அனைத்து புதிய வாடிக்கையாளர்களுக்கும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி 8 ஆண்டுகள் உட்பட ஸ்டாண்டர்ட் வாரன்டி 2 ஆண்டுகள் என மொத்தமாக பத்து ஆண்டுகள் வழங்குகின்றது சிறப்பு சலுகையாக நீட்டிக்கப்பட்ட வாரண்டி குறிப்பிட்ட நாட்களுக்கு இலவசமாக அனைத்து புதிய வாடிக்கையாளர்களுக்கும் வழங்க திட்டமிட்டு இருக்கின்றது.
குறிப்பாக, 10 ஆண்டுகள் வாரண்டி என்பது இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற அனைத்து ஸ்கூட்டர்கள் மற்றும் MT-15, R15, FZ வரிசை மோட்டார்சைக்கிள்களுக்கு மட்டுமே பொருந்தும், இறக்குமதி செய்யப்படுகின்ற, பாகங்களை தருவித்து ஒருங்கிணைக்கப்படுகின்ற மாடல்களுக்கு பொருந்தாது என யமஹா தெளிவுப்படுத்தியுள்ளது.
நீட்டிக்கப்பட்ட உத்திரவாதத்தில் எரிபொருள் உட்செலுத்துதல் (FI System) அமைப்பு உட்பட எஞ்சின் மற்றும் மின் உபகரணங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் நிலையில் ஸ்கூட்டர்களுக்கு 1,00,000 கிமீ வரையும் அதே வேளையில், பைக்குகளுக்கு 1,25,000 கிமீ வரை உத்தரவாதம் கிடைக்கின்றது.
10 வருட வாரண்டி அறிமுக சலுகையில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்ற நிலையில் எவ்வளவு காலம் நீடிக்கும் என உறுதிப்படுத்தவில்லை. அதன் பிறகு ஸ்கூட்டர்களுக்கு ரூ.1,799 மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.2,499 செலுத்தி நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தைத் தேர்வுசெய்யலாம்.
முதல் உரிமையாளருக்கு மட்டுமல்லாமல் யூஸ்டு மாடலாக வாங்கிய உரிமையாளர்களுக்கும் நீட்டிக்கப்பட்ட வாரன்டி பொருந்தும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாக கருதப்படுகின்றது.