இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் ஏதெர் எனர்ஜி அமோக வரவேற்பினை பெற்று வரும் நிலையில் தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் உள்ள ஸ்கூட்டர்களுக்கு கூடுதலாக BAAS (Battery-as-a-Service) திட்டத்தை செயற்படுத்தவும், கூடுதலாக டீலர் எண்ணிக்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் 750 ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, ஏதெர் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீட்டாளரும், இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளருமான ஹீரோ நிறுவனத்தின் விடா விஎக்ஸ் 2 ஸ்கூட்டரில் பேட்டரிக்கான சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்திய காரணத்தால் விலை ரூ.45,000 ஆக துவங்குகின்றது.
Ather BAAS Plan
வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஏதெரின் கம்யூனிட்டி கொண்டாட்டம் நடைபெற உள்ள அரங்கில் புதிய EL ஸ்கூட்டர் பிளாட்ஃபாரம், விரைவான சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மென்பொருள் உட்பட எலக்ட்ரிக் பைக் பற்றிய அறிவிப்புகளை வெளியிடலாம்.
இதே நாளில் பேட்டரி ஏஸ் ஏ சர்வீஸ் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அதன் பிளான் விபரங்கள் மற்றும் கட்டணம் தொடர்பான தகவல்களை அறிவிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஏதெரின் மின்சார ஸ்கூட்டர்களை மிக குறைந்த கட்டணத்தில் வாங்குவதுடன் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணத்தை செலுத்தலாம்.
தென்னிந்தியாவில் சிறப்பான டீலர் எண்ணிக்கை கொண்டுள்ள இந்நிறுவனம், சுமார் 350 இலிருந்து நடப்பு ஆண்டு இறுதிக்குள் டீலர்களின் எண்ணிக்கையை 750 ஆக விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, புதிதாக துவங்கப்பட உள்ள டீலர்கள் வட இந்தியாவின் முக்கிய நகரங்களில் அதிக எண்ணிக்கையில் துவங்க உள்ளது.
ஏற்கனவே, ஏதெர் 1 லட்சத்திற்கு குறைந்த விலை ஸ்கூட்டர் வெளியிடுவதில் பெரிதாக ஆர்வம் இல்லாமல் உள்ளதால், புதிய EL ஸ்கூட்டர் பிளாட்ஃபாரத்தின் மூலம் சாத்தியப்படுத்துமா அல்லது தொடர்ந்து பிரீமியம் சந்தையிலே இருக்குமா என்பது ஆகஸ்டில் தெரியக்கூடும்.